Type Here to Get Search Results !

கார்த்திகை தீபம் 2024 : பழைய அகலில் தீபம் ஏற்றலாமா? மண் அகலில் தீபம் ஏற்ற காரணம் தெரியுமா?



வருடம் முழுவதும் வீட்டிலும், கோவில்களிலும் சென்று நாம் பல விதமான விளக்குகள் ஏற்றினாலும் கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை தீபத்தன்று வீடு முழுவதும் விளக்கேற்றுவது மிகவும் விசேஷமானதாகும். சிலர் கார்த்திகை மாதத்தின் அனைத்து நாட்களும் காலை, மாலை இரு வேளையும் வீட்டில் விளக்குகள் ஏற்றுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.

திருக்கார்த்திகை தீபத்தன்று வீடு முழுவதும் அகல் விளக்குகளால் விளக்கேற்றி, இறைசக்தியை நம்முடைய வீட்டில் எழுந்தருள செய்து வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள், துன்பங்கள், தீய எண்ணங்கள் ஆகியவற்றை அகற்றி, தெய்வ அருளை பெற வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

கார்த்திகை தீபத் திருநாள் :

கார்த்திகை தீபத் திருநாள் என்றாலே வாசல் துவங்கி, வீடு முழுவதும் விளக்குகள் ஏற்றி வழிபடுவது நம்முடைய வழக்கம். ஜோதி வடிவமாக இருக்கும் இறைவனை நம்முடைய வீட்டிலும் எழுந்தருளச் செய்து, இறைவனின் அருளை அனைவரும் பெற வேண்டும் என்பதே கார்த்திகை தீபத் திருநாளின் நோக்கமாகும். அதிலும் இந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி மங்களகரமான வெள்ளிக்கிழமையில் கார்த்திகை தீபத் திருநாள் அமைந்துள்ளது. இந்த நாளில் வீடு முழுவதும் விளக்கேற்றி வழிபடுவதால் சிவ பெருமானின் அருளுடன், மகாலட்சுமியின் அருளையும் நாம் பெற முடியும்.

விளக்கு தொடர்பான சந்தேகங்கள் :

கார்த்திகை தீபத் திருநாளில் வீடுகளில் விளக்கேற்றும் வழக்கத்தை காலம் காலமாக நாம் கடைபிடித்து வந்தாலும் ஒவ்வொரு முறையும் தீபம் ஏற்றுவது தொடர்பாக பலருக்கும் பலவிதமான கேள்விகள், குழப்பங்கள், சந்தேகங்கள் ஆகியன இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதில் மிக முக்கியமானதாக இருப்பது கார்த்திகை தீபத் திருநாள் அன்று கண்டிப்பாக மண் அகலில் தான் தீபம் ஏற்ற வேண்டுமா? பழைய அகலில் தீபம் ஏற்றலாமா, கூடாதா? ஒவ்வொரு ஆண்டும் புதிய அகல் வாங்கித் தான் தீபம் ஏற்ற வேண்டுமா? என்பது தான். பலருக்கும் இருக்கும் இந்த சந்தேகங்களுக்கான சரியான விளக்கத்தை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மண் அகலில் விளக்கு ஏற்றுவது ஏன் ?

மெழுகினால் செய்யப்பட்ட நாகரீக விளக்குகளை விட மண்ணால் செய்யப்பட்ட அகலில் விளக்கேற்றுவதே சிறப்பானதாகும். திருக்கார்த்திகை தீபம் அன்று மட்டும் அல்லாது எப்போதும் மண் அகலால் ஆன விளக்குகளாலேயே அனைத்து தெய்வங்களுக்கும் விளக்கேற்ற வேண்டும். மண் அகல் என்பது சிவ பெருமானை போல் பஞ்சபூதங்களை உள்ளடக்கியதாகும். களிமண்ணில் நீர் ஊற்றி, சூரியஒளியில் காய வைத்து, காற்றின் உதவி கொண்டு நெருப்பில் இட்டு தான் அகல் விளக்கு செய்யப்படுகிறது. அதே போல் அகல் விளக்கு மண், அதில் ஊற்றப்படும் எண்ணெய் நீர், திரி வாயு, நெருப்பு அக்னி, அதிலிருந்து வெளிப்படும் ஒளி ஆகாயம் என பஞ்சபூதங்களும் அகல் விளக்கில் அடக்கம்.

மண் அகல் தீப நன்மைகள் :

மண் அகலில் விளக்கேற்றினால் ஆயுள் பெருகும். இது சனி பகவானின் அம்சமாக கருதப்படுவதால் மண் அகலில் விளக்கேற்றினால் சனி தோஷம் விலகும். அகல் விளக்கு மண் மகளான மகாலட்சுமியையும் குறிப்பதாகும். மண் என்பது நிலையாக இருக்கக் கூடியது. அது போல் நம்மை தேடி வரும் செல்வம் நம்மிடம் நிலையாக, உறுதியாக தங்க வேண்டும் என்பதற்காக மண் அகலில் தீபம் ஏற்ற வேண்டும் என்கிறார்கள்.

பழைய அகலில் தீபம் ஏற்றலாமா?

கார்த்திகை தீபத்தன்று பழைய அகல் நன்றாக இருக்கும் பட்சத்தில் அதை நன்றாக சுத்தம் செய்து கழுவி விட்டு, காய வைத்து, அதற்கு மஞ்சள், குங்குமம் வைத்து அந்த விளக்கை பயன்படுத்தி தீபம் ஏற்றலாம். ஒவ்வொரு ஆண்டும் புதிதாக அகல் விளக்கு வாங்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஒருவேளை நீங்கள் பயன்படுத்தும் பழைய அகல் மிகவும் கருப்பாகி, ஏதாவது ஒரு பாகம் சேதமடைந்து இருந்தால் அந்த அகலை பூஜை அறை குப்பைகளுடன் சேர்த்து விட்டு, புதிய அகல் வாங்கி பயன்படுத்தலாம். அப்படி இல்லாமல் புது அகல் வாங்கி விளக்கேற்ற வேண்டும் என நினைப்பவர்கள், வழக்கமாக ஏற்றும் பழைய விளக்குகளுடன் ஒவ்வொரு ஆண்டும் ஒன்று அல்லது 2 புதிய அகல்களை வாங்கி வைத்து அவற்றையும் சேர்த்து ஏற்றலாம்.

எந்த திசையில் தீபம் ஏற்ற வேண்டும் ?

அகல் விளக்கு ஏற்றும் போது அதன் சுடர் எந்த திசையை நோக்கி இருக்கிறது என்பதும் மிக மிக முக்கியம். கிழக்கு நோக்கி இருப்பதாக ஏற்றுவது சிறப்பு. துன்பங்கள் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் பெருக கிழக்கு திசை நோக்கியும், கடன் தீர மேற்கு திசை நோக்கியும், சுப காரிய தடைகள் விலக வடக்கு திசை நோக்கியும் தீபம் ஏற்ற வேண்டும். எந்த காரணத்திற்காகவும் தெற்கு திசையை பார்த்தவாறு விளக்கு ஏற்றக் கூடாது.


Top Post Ad

Below Post Ad