வெளியூரில் வேலை நிமித்தமாகவோ இல்லை வேறு காரணமாகவோ தங்கி இருந்து தீபாவளிக்கு தன் சொந்த ஊருக்கு செல்லும் அன்பர்களே உங்களுக்காக இப்பதிவு …
1 . தொடர்வண்டி மற்றும் பேரூந்தில் கூட்ட நெரிசல் அதிகமாக கட்டாயம் இருக்கும், ஆதலால் முன்பதிவு செய்யாமல் பயணத்தை தொடங்காதீர்.
2. எனக்கு முன்பதிவு செய்யும் அளவிற்கு வசதியில்லை, நான் பேருந்து மாறிமாறி சென்றுவிடுவேன் என்போர் தயவு செய்து உங்களின் பயணத்தில் பகலில் கொள்ளவும். காரணம் இரவு நேரம் நீங்க நினைத்த படி பேரூந்து கிடைக்கவில்லை என்றால் உங்கள் ஆசைப்பயணம் பெரும் அலைகழிப்பு பயணமாக மாறிவிடும்.
3. தன் கிராமத்திற்கு செல்வோர், நகரத்தில் இருந்து தீபாவளி வெடிகளை வாங்கிச் செல்வதை தவிர்க்கவும். நான் பாதுகாப்பாக கொண்டு சென்றுவிடுவேன் என்ற அசட்டு தைரியத்தை தயவு செய்து விட்டுவிடுங்கள். காரணம் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் பாதிப்பு உங்களுக்கு மட்டுமல்ல, எந்த வித தவறும் செய்யாத பலரின் கனவையும் அது சிதைத்துவிடும்.
4. உங்களின் பயணத்தின் போது மறக்காமல் உங்களின் பேருந்து எண்ணை குறித்து வைத்துக் கொள்ளுங்கள், காரணம் தேநீர்க்கோ இல்லை உணர்விற்கோ நீங்கள் இடையில் இறங்கும் சூழல் ஏற்பட்டால் மீண்டும் உங்கள் பேருந்தை சரியாக கண்டுபிடித்து ஏறுவது கடினம், ஏனென்றால் இந்த பண்டிகை காலத்தில் உணவு உண்ண வண்டி நிறுத்தும் இடங்களில் எண்ணற்ற பேருந்து நிற்கும். ஆதலால் மறக்காமல் உங்களின் வண்டியின் எண்ணையோ இல்லை வண்டியை ஒரு புகைப்படமே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் நல்லது.
5. குழந்தைகளை கூட்டிச்செல்வோர், எதற்காகவும் எக்காரணத்தைக் கொண்டும் குழந்தைகளை ஓரிடத்தில் இருக்கவைத்துவிட்டு பிள்ளைக்களுக்கு தேவையானவற்றை வாங்கிவருவதாக செல்லாதீர். குறிப்பு பிள்ளைகள் கழுத்தில் நகைகளை தவிர்க்கவும்.
6. மேலும் தல தீபாவளி கொண்டாடச் சொல்லும் புது தம்பதியினர், மாமனார் வீட்டில் அதைச்செய்யவில்லை இதைச்செய்யவில்லை என கோபித்துக் கொள்ளவோ இல்லை அதை இதை செய்யுங்கள் என கட்டாயப்படுத்தவோ செய்யாதீர். காரணம் இன்னும் பல குடும்பம் கொரோனா மற்றும் ஊரடங்கு தந்த வறுமையில் இருந்து மீண்டே வரவில்லை. அப்படிப்பட்ட சூழலில் உங்களின் வேண்டுதல் அவர்களை மேலும் காயப்படுத்தலாம், ஆதலால் மனிதாபிமான மனம் கொண்டு ஊரடங்கு தந்த வலி உணர்ந்து உங்கள் தல தீபாவளியை இருப்பதற்குள் இன்பமாக கொண்டாடுங்கள்.
இந்த தீபாவளி அனைவர் வாழ்விலும் இருள் அகற்றும் தீப ஒளி திருநாளாக அமையட்டும்