நம் முன்னோர்கள் அக்காலத்தில் ஃபிட்டாக இருந்ததற்கு காரணம் அவர்கள் குடித்து வந்த ஒருசில பானங்கள் தான். அப்படிப்பட்ட ஒரு பானம் தான் வெந்தய நீர்.
பொதுவாக வெந்தய நீர் உடல் சூட்டை குறைக்க உதவி புரியும் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் அந்த வெந்தய நீருடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடித்து வந்தால், உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா?
சமையலறையில் உள்ள வெந்தயம் உடலில் பல மாயங்களை செய்யும் வகையில் பல அத்தியாவசிய சத்துக்களைக் கொண்டுள்ளன. அதுவும் ஒரு ஸ்பூன் வெந்தயத்தில் 3 கிராம் புரோட்டீன், 6 கிராம்பு கார்போஹைட்ரேட், 3 கிராம் நார்ச்சத்து உள்ளன.
இது தவிர 1 கிராம் கொழுப்பு, ஒரு நாளைக்கு வேண்டிய மக்னீசியத்தில் 7 சதவீதமும், ஒரு நாளைக்கு வேண்டிய இரும்புச்சத்ததில் 20 சதவீதமும், ஒரு நாளைக்கு வேண்டிய மக்னீசியத்தில் 5 சதவீதமும் உள்ளன. இது தவிர வைட்டமின் ஏ, சி, பி, தயமின், ரிபோஃப்ளேவின் மற்றும் நியாசின் போன்றவை உள்ளன.
அதேப் போல் எலுமிச்சையும் உடலுக்கு தேவையான பல சத்துக்களைக் கொண்டுள்ளன. முக்கியமாக எலுமிச்சை உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க உதவுகிறது. ஒரு எலுமிச்சையில் 17 கலோரிகள், 0.2 கி கொழுப்பு, 1 மிகி சோடியம், 5.4 கி கார்போஹைட்ரேட், 1.6 கி நாரச்சத்து, 1.5 கி சர்க்கரை, 0.6 கி புரோட்டீன், 30.7 மிகி வைட்டமின் சி, 80 மிகி பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.
இப்படிப்பட்ட வெந்தயம் மற்றும் எலுமிச்சையை ஒன்றாக உட்கொள்ளும் போது, அது தொப்பை மற்றும் உடல் பருமன் பிரச்சனையை திறம்பட குறைக்க உதவுகிறது. அதுவும் எலுமிச்சை கலந்த வெந்தய நீரை காலையில் குடித்து வந்தால், அது ஏராளமான நன்மைகளை உடலுக்கு வழங்கும்.
எலுமிச்சை கலந்த வெந்தய நீர் எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது?
உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள், தினமும் வெந்தய நீரை காலையில் எழுந்ததும் காபி, டீ-க்கு பதிலாக குடிக்கும் போது, எடையைக் குறைக்க உதவி புரிகிறது. மேலும் இது நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியுடனும், ஆற்றலுடனும் இருக்க உதவுகிறது.
ஒருவர் தொடர்ச்சியாக எலுமிச்சை கலந்த வெந்தய நீரைக் குடிக்கும் போது, அது உடலினுள் உள்ள வீக்கம்/அழற்சியைக் குறைக்கிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது, மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது.
வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரித்து, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. அதோடு, இது நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்க உதவி புரிந்து, அடிக்கடி பசி எடுப்பதையும், அதிகமாக உணவு உண்பதையும் தடுக்கிறது.
எலுமிச்சை சாற்றினை வெந்தய நீரில் சேர்க்கும் போது, எலுமிச்சையில் உள்ள உட்பொருட்கள் உடலினுள் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது மற்றும் உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, கொழுப்புக்களைக் கரைக்கிறது. ஆகவே வேகமாக உடல் எடையை மற்றும் தொப்பையைக் குறைக்க நினைத்தால், வெந்தய நீரில் எலுமிச்சை சாற்றினை கலந்து குடிப்பது சிறந்த பலனைத் தரும்.
*தயாரிப்பது எப்படி?*
உடல் எடையைக் குறைக்க உதவும் இந்த பானத்தைத் தயாரிப்பது மிகவும் சுலபம். கீழே அதை தயாரிக்கும் முறை கொடுக்கப்பட்டுள்ளன.
*தேவையான பொருட்கள்:*
* வெந்தயம் - 1 டீஸ்பூன்
* எலுமிச்சை - பாதி
* தண்ணீர் - 1 கப்
செய்முறை:
* முதலில் இரவு தூங்கும் போது ஒரு கப் நீரில் வெந்தய விதைகளைப் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* பின் மறுநாள் காலையில் அந்நீரை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு அந்நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் அப்படியே குடிக்கலாம்.
* நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவராயின், அந்த வெந்தய நீரில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து, சுவைக்கு சிறிது தேன் சேர்த்து கலந்து கொள்ளலாம். இதனால் உடல் எடையைக் குறைக்கும் செயல்முறை சற்று வேகப்படுத்தப்படும்.
எலுமிச்சை சாறு கலந்த வெந்தய நீரை காலையில் எழுந்ததும் குடிக்கும் போது, அது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுவதோடு, எடை இழப்பை அதிகரிக்கும். மேலும் இது உடலினுள் உள்ள வீக்கத்தைக் குறைத்து, செரிமானத்தை மேம்படுத்தும் மற்றும் இரத்த சர்க்கரை அளவையும் சீராக பராமரிக்கும்.
குறிப்பு:
உடல் எடையைக் குறைக்க எந்த ஒரு பானத்தை நீங்கள் குடித்தாலும், நல்ல பலன் கிடைக்க வேண்டுமானால், எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டு, தினமும் தவறாமல் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்பதை மறவாதீர்கள்.