உன்னால் தான்
உலகில் என் உயிர்ப்பு
செல்லமெல்லாம் அம்மாவே அள்ளித்தர
சொல்லாமல் நெஞ்சில் நிறுத்திக்கிடந்த ஈர இதயம் நீ
கம்பெடுத்து அடிக்கையிலும்
கணக்கு சொல்லித்தருகையிலும்
நீ காட்டிய கடுமை
உனையோர் அரக்கனாகவே
மனக்கண்ணில் நிறுத்தும்..
கண்ணுக்கு எண்ணெய் கட்டி
சீயக்காயில் தலைகசக்கி
சுளுக்கெடுக்கும் அழகே தனிதானப்பா..
தீபாவளி பொங்கலென புத்தாடை தருவாய்
புன்னகை கலந்து எப்போதும் பேசியதில்லை நீ ஒருவாய்..
அம்மா சொல்லும் அப்பா ரொம்ப நல்லவுகனு
உன் அழுக்கு சட்டைய காட்டும்
வியர்வை ஒழுகி உப்பாய் பூத்திருக்கும்
உழைப்பதில் பொதிந்துகிடக்கும்
காலுக்கு செருப்பில்ல
மோட்டாரு வண்டியுமில்ல
பாதம் நோக நீ மிதிச்ச மிதிவண்டிய தொடுகையில் உணர்கிறேன்
குடும்பத்திற்காய் உனதாசை குறுக்கிய உயர்வினை
அதிகமாய் உரையாடலற்று கிடக்கிற ஆத்மா
தாயினும் பரிவு காட்டுகிற தகப்பன் சாமி
குடும்பத்தையே தாங்கி தாங்கி தனக்கென ஏங்காத காந்தம்
கோபக்காரர்
அடிச்சிருவார்னு விளக்கப்பட்ட உங்கள் உருவியலை இன்னும்கூட மனனப் படுத்தியே வைத்திருக்கிறது
பிள்ளை மனசு
திருநாளோ
திருவிழாவோ
பிடித்த உணவோ
சினிமாவோ
யாவற்றுக்குமே
அம்மாவின் பின்னிருந்தே சம்மதம் வேண்டினாலும் முன்னிருந்து அழைத்துச் செல்லும் கரடுப்பலா நீ
எங்களின் மகிழ்விலே வாழ்கிறாய்
எங்களின் மகிழ்விற்கே வாழ்கிறாய்
ஆளாக்கி
வசதிபல காண வைத்தாலும்
சாய்வு நாற்காலியில் இன்னமும் கூட பெரும்பேச்சின்றியே இளைப்பாறுகிறாய்
உன்னோடு
விரல் பற்றி நடக்கக் கூட வியர்த்திருக்கிறேன்
இன்றோ
பேரன் பேத்திகளின் ஆனந்த களஞ்சியமாய் கிடக்கிறாய்
நிறையவே இழந்திருக்கிறேன்
அப்பாவின் மீது கட்டமைக்கப்பட்ட அளவற்ற பிம்பங்களால்...
இனிய தந்தையர் தின வாழ்த்துகள்
*சீனி.தனஞ்செழியன்