வாட்ஸ்ஆப் குழுவில் இருந்து 'நோட்டிபிகேஷன்' இன்றி அமைதியாக வெளியேறும் வசதி விரைவில் வரவுள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் முக்கிய சமூக வலைத்தளமான வாட்ஸ் ஆப் இருக்கிறது. பயன்பாட்டுக்கு மிகவும் எளிதாக இருப்பதால் தனிப்பட்ட விஷயத்திற்காக மட்டுமின்றி அலுவலக வேலை ரீதியாகவும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பயனர்களின் வசதிக்காக அவ்வப்போது இதில் 'அப்டேட்'களும் வந்தவண்ணம் இருக்கின்றன. இந்நிலையில், எந்தவித அறிவிப்புமின்றி வாட்ஸ்ஆப் குழுவில் இருந்து வெளியேற புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
சாதாரணமாக வாட்ஸ்ஆப் குழுவில் இருந்து வெளியேறினால் குரூப் சாட்டில்'நோட்டிபிகேஷன்' வரும். இது குழுவில் உள்ள அனைவருக்கும் தெரியும்படி இருக்கும்.
ஆனால், வரவிருக்கும் புதிய வசதியில் நீங்கள் குழுவில் இருந்து வெளியேறினால் குரூப் சாட்டில் அவ்வாறு அறிவிப்பு வராது. ஆனால், அந்த குழுவின் 'அட்மின்' மட்டும் தெரிந்துகொள்ளும்படி கொண்டுவரப்பட உள்ளது. இன்னும் இது சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை, உருவாக்க நிலையிலே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.