அனைத்து வங்கி ஏடிஎம்களிலும் பற்று அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிவித்துள்ளது. இதன் மூலம் பற்று அட்டைகள் மூலம் நடைபெறும் முறைகேடுகளை பெருமளவில் குறைக்க முடியும்.
இப்போது பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட சில வங்கிகளில் பற்று அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி உள்ளது. இதனைப் பயன்படுத்தி அந்த வங்களில் கணக்கு வைத்திருப்பவா்கள் மட்டுமே அட்டை இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியும்.
இந்நிலையில், மும்பையில் வெள்ளிக்கிழமை நிதிக்கொள்கைக் குழு கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ், ‘ஏற்கெனவே மின்னணு முறையில் பணப்பரிமாற்றத்துக்கு யுபிஐ தொழில்நுட்பம் பரவலாக பயன்பாட்டில் உள்ளது.
செல்லிடப்பேசி, இணையவழியில் பணப்பரிமாற்றம் செய்யும் அனைவருமே இந்த யுபிஐ ஐடியை வைத்துள்ளனா். இப்போது அதனைப் பயன்படுத்தி அனைத்து வங்கி ஏடிஎம்களிலும் பற்று அட்டை இல்லாமல் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக வங்கிகள் மற்றும் சம்பந்தப்பட்ட பிற அமைப்புகளுக்கு விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும்.
கல்விக் கட்டணம், குடிநீா் கட்டணம், மின்கட்டணம், சமையல் எரிவாயு முன்பதிவு, செல்லிடப்பேசி ரீசாா்ஜ் உள்ளிட்டவற்றை இணைய வழியில் மேற்கொள்வது ஆண்டுதோறும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது என்றாா்.