சென்னை ஐ.ஐ.டி.யில் விடுதியில் தங்கி படித்த 12 மாணவர்களுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அங்கு ஆய்வு மேற்கொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், அங்கு கொரோனா தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பாதிப்பு 30 ஆக உயர்வு
மேலும், ஐ.ஐ.டி.யில் மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் உள்பட 2 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் ஐ.ஐ.டி.யில் நேற்று மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்து உள்ளது. இதையடுத்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் பணியினை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று காலை சென்னை ஐ.ஐ.டி.யில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதை ஆய்வு மேற்கொண்ட டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியிலும் ஆய்வு செய்தார். ஆய்வின் போது பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், டீன் டாக்டர் ஜெயந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அப்போது டாக்டர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முககவசம் அணியவில்லை என்றால்...
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் 666 பேருக்கு நேற்று முன்தினம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஐ.ஐ.டி.யில் பாதிப்பு எண்ணிக்கை 30 ஆக அதிகரித்து உள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரையும் அங்கேயே தனிமைப்படுத்திக்கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஐ.ஐ.டி. விடுதி மூலம் தொற்று பரவியுள்ளது. மேலும் ஐ.ஐ.டி.யில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபர்கள், பரிசோதனை முடிவு வரும் வரை தனிமைப்படுத்திக்கொள்ளவும், ‘தெர்மல் ஸ்கேனர்’ மூலம் தொடர் பரிசோதனை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதவிர கிண்டி கிங் ஆஸ்பத்திரியில் அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், ஆஸ்பத்திரியில் சென்று சிகிச்சை பெறும் அளவுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. தொற்று எண்ணிக்கை சற்று உயரத்தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் முககவசம் மற்றும் தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் பொது இடங்களில் முககவசம் அணியவில்லை என்றால், அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.
ரூ.500 அபராதம்
இதையடுத்து கொரோனா தொற்று குறைந்து வந்ததால், அபராதம் விதிப்பதில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது மீண்டும் பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளோம். தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் தான் இருக்கிறது. அதேநேரத்தில் ஐரோப்பா, சீனா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கொரோனா அதிகரித்து வருகிறது.
எனவே, நோய்த்தொற்று அறிகுறி இருந்தால் தவறாமல் ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். ஐ.ஐ.டி.யை பொறுத்தவரை வடமாநிலங்களில் இருந்து பலர் வந்துள்ளனர். அவர்களது மாதிரிகள் மரபியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனாவுக்கு 1 லட்சத்து 16 ஆயிரத்து 452 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. தமிழகத்தில் பரிசோதனை எண்ணிக்கை மேலும் அதிகப்படுத்தி இருப்பதால் கொரோனா தொற்று பாதிப்பு இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
மெகா தடுப்பூசி முகாம்
பொதுமக்கள் வேலை செய்யும் இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை மண்டல அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்படும். வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் சுய மருத்துவ கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். நோய்த்தொற்று இருப்பவர்கள் அதிகமாக ஆஸ்பத்திரிக்கு வருவதால் ஆஸ்பத்திரி ஊழியர்கள் உரிய கட்டுப்பாடுடன் செயல்பட அறிவுறுத்தி உள்ளோம்.
தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கை தினசரி 4 ஆயிரம் என்று குறைந்த நிலையில், நேற்று (நேற்று முன்தினம்) மட்டும் 1.20 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். பள்ளி, கல்லூரிகளில் தேவைப்பட்டால் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி, கல்லூரிகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்துகளில் பயணம் செய்யும் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். தேவைப்பட்டால் அடுத்த மாதம் தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் மீண்டும் ஏற்பாடு செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தயார் நிலையில் ஆஸ்பத்திரிகள்
இந்த நிலையில் அனைத்து அரசு ஆஸ்பத்திரி டீன்களுக்கு மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சை அளிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், அனைத்து சுகாதார பணியாளர்களும் முககவசம் அணிய வேண்டும். விடுதியில் தங்கி மருத்துவம் மற்றும் செவிலியர் படிப்பு பயிலும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
புதுப்பிக்க வேண்டும்
அதேபோல், ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் அனைத்து நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா வார்டுகளை மறுகட்டமைப்பு செய்வதுடன், படுக்கைகள், மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் வசதிகள், மருந்துகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
மருத்துவ கல்லூரி வளாகத்தில் பெரிய அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். கொரோனா மருத்துவ உபகரணங்களின் வேலை நிலையை புதுப்பிக்க வேண்டும். தடுப்பூசி முகாம்களின் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும். இளநிலை மற்றும் முதுநிலை படிப்பு பயிலும் மருத்துவ மாணவர்கள் மற்றும் செவிலிய மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.