15 வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்ட வாகனங்களை வைத்திருப்பவர்கள் இனிமேல் அதற்கு அதிக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது.வாகன பதிவு மற்றும் தகுதி சான்றிதழ் புதுப்பிப்பதற்கான கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாகன பதிவு சான்றிதழ் மற்றும் தகுதி சான்றிதழ் புதுப்பிப்பதற்கான கட்டணம் 3 முதல் 10 மடங்கு உயர்ந்துள்ளது. புதிய கட்டண உயர்வு கடந்த 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. 15 வருடங்களுக்கு மேலான கார் வைத்திருப்பவர்கள் வாகன பதிவு சான்றிதழை புதுப்பிப்பதற்கு ரூ.600 வசூலிக்கப்பட்டு வந்தது. அது தற்போது ரூ.5 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனங்களுக்கான வாகன பதிவு சான்றிதழுக்கான கட்டணம் ரூ.300-ல் இருந்து ரூ.1,000 ஆகவும், ஆட்டோக்களுக்கு ரூ.600-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 500 ஆகவும், இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.2 ஆயிரத்து 500 வரை இருந்தது, ரூ.10 ஆயிரம் ஆகவும், இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு ரூ.5 ஆயிரம் வரை இருந்தது, ரூ.40 ஆயிரம் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.15 வருடங்களுக்கு மேலான வணிக ரீதியான வாகனங்களுக்கும் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்களை ஆய்வு செய்து தகுதிக்கான புதுப்பிப்பு சான்றிதழ் வழங்குவதற்கு நேரடியாக சென்றால் ரூ.400-ம், தானியங்கி முறையில் விண்ணப்பித்தால் ரூ.500-ம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல, மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் இலகு ரக வாகனங்களுக்கு நேரடியாக சென்றால் ரூ.800-ம், தானியங்கி முறையில் விண்ணப்பித்தால் ரூ.1,000-மும், நடுத்தர சரக்கு மற்றும் பயணிகள் வாகனத்துக்கு நேரடியாக சென்றால் ரூ.800-ம், தானியங்கி முறையில் ரூ.1,300-ம், கனரக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனத்துக்கு நேரடியாக சென்றால் ரூ.1,000-ம், தானியங்கி முறையில் ரூ.1,500-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு ஆய்வு நடத்தி தகுதிக்கான புதுப்பிப்பு சான்றிதழ் வழங்குவதற்கு, மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.1,000 ஆகவும், 3 சக்கர வாகனங்களுக்கு ரூ.3 ஆயிரத்து 500 ஆகவும், இலகு ரக வாகனங்களுக்கு ரூ.7 ஆயிரம் ஆகவும், நடுத்தர சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரம் ஆகவும், கனரக வாகனங்கள், பயணிகள் வாகனங்களுக்கு ரூ.12 ஆயிரத்து 500 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
தகுதி சான்றிதழ் புதுப்பிப்பதற்கான காலஅவகாசம் முடிந்து, அதனை புதுப்பிக்கும் வரையிலான ஒவ்வொரு நாட்களுக்கும் ரூ.50 அபராதம் வசூலிக்கப்பட உள்ளது.
அதே சமயத்தில், புது வாகனங்களை பதிவு செய்வதற்கான சான்றிதழ் கட்டணம், மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.300 ஆகவும், 3 சக்கர வாகனங்கள் மற்றும் இலகு ரக வாகனங்களுக்கு ரூ.2 ஆயிரத்து 500 ஆகவும், 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.5 ஆயிரம் ஆகவும் உள்ளது. 'ஸ்மார்ட் கார்டு' வடிவில் வாகன பதிவு சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால் வாகன ஓட்டிகள் ரூ.200 கூடுதலாக செலுத்த வேண்டும். வாகன பதிவு சான்றிதழ் புதுப்பிக்க காலதாமதமானால், ஒவ்வொரு மாதத்துக்கும் மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.300-ம், அனைத்து வகை போக்குவரத்து பயன்பாட்டுக்கு அல்லாத வாகனங்களுக்கு ரூ.500-ம் அபராதமாக வசூலிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து கமிஷனரக அதிகாரிகள் கூறும்போது, "மத்திய மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்து, புதிய கட்டணம் ஏப்ரல் 1-ந்தேதி (கடந்த 1-ந்தேதி) முதல் அமலுக்கு வரும் என்ற அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை கடந்த ஆண்டு அக்டோபர் 4-ந்தேதி வெளியிட்டு இருந்தது. அதன்படி, தற்போது கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.