Type Here to Get Search Results !

இத்தனை உடல் பிரச்னைகளுக்கு `பழைய சோறு' தீர்வளிக்கிறதா? விடைசொல்லும் தமிழக ஆய்வு



நம் முந்தைய தலைமுறையினரின் வாழ்வியலில் இருந்த பல அம்சங்களை பழைமை என நிராகரித்து விடுகிறோம். கால மாற்றத்துக்குத் தகுந்தாற்போல் அறிவியலில் பரிணாமமும் நிகழ்ந்து நவீனமாகி வருவது அவசியமானது. ஆனால், நமது முந்தைய தலைமுறையினரின் வாழ்வியலில் உள்ள நல்ல அம்சங்களை நவீனம் என்கிற பெயரில் நிராகரித்துவிடக்கூடாது. அதற்கான சமீபத்தைய உதாரணம்தான் பழைய சோற்றின் மருத்துவப் பயன் குறித்த ஆராய்ச்சி. ஸ்டான்லி மருத்துவமனை சார்பாக முன்னெடுக்கப்பட்ட இந்த ஆராய்ச்சியில் பெருங்குடல் அழற்சி, குடற்புண், வயிற்றுப் பொருமல் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு பழைய சோறு சாப்பிடுவது தீர்வாக இருக்கிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட ஸ்டான்லி மருத்துவமனையின் இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சைப் பிரிவின் தலைவர் ஜஸ்வந்திடம் இது குறித்து கேட்டோம்.

``மேற்கத்திய நாடுகளில் மட்டுமே அதிக அளவில் இருந்த குடல் தொடர்பான நோய்கள் 1980-ம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியாவிலும் அதிகரிக்கத் தொடங்கியது. வாழ்வியல் மாற்றம் மற்றும் முறையற்ற உணவுப் பழக்கத்தின் விளைவாகவே இது நடந்தது. இப்படியான சூழலில் தினசரி காலையில் முந்தைய நாள் இரவு ஊற வைத்த பழைய சோற்றைத் தொடர்ந்து சாப்பிடுகிறவர்களுக்கு குடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுவதில்லை என்பதைப் பலரிடம் நேரடியாக விசாரித்துத் தெரிந்துகொண்டேன். பழைய சோற்றின் மகத்துவத்தை அப்போதுதான் புரிந்துகொண்டேன். இதுதான் இந்த ஆராய்ச்சிக்கான அடிப்படையாக இருந்தது.

குடல் நலம்தான் உடல் நலத்துக்கு அடிப்படையானது. உடல்நலப் பிரச்னைகள் தொடர்பாகச் செலுத்தப்படும் ஊசிகள்/ மருந்துகள், நாம் சாப்பிடும் இறைச்சி வகைகள் எனப் பலவற்றிலும் நோய் எதிர்ப்பு மருந்து (ஆன்டி பயாட்டிக்) நிறைந்திருக்கின்றன. இவை உடலில் அதிகம் சேர்வதால் குடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களையும் சேர்த்து அழித்துவிடுகின்றன. இந்த நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் செரிமானத்துக்கு உதவுவதோடு குடலுக்குத் தேவையான சில வைட்டமின்களையும் உற்பத்தி செய்கின்றன. அவை அழிக்கப்படும்போது செரிமானப் பிரச்னை உள்ளிட்ட குடல் சார்ந்த பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. பழைய சோற்றில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கின்றன என்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளோம். சோற்றை தண்ணீரில் ஊற வைக்கும்போது அது நொதிக்கையில் காற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அவை உள் இழுத்துக்கொள்கின்றன. ஆகவே, காற்று உட்புகும்படியாக மண் பானையில் சோற்றை ஊற வைக்கும்போது அதிக அளவில் நல்ல பாக்டீரியாக்கள் உருவாகின்றன என்பதைக் கண்டறிந்தோம்.

செரிமானத்துக்கு நார்ச்சத்து அத்தியாவசிமானது. அரிசியின் மேற்பரப்பில்தான் நார்ச்சத்து நிறைந்திருக்கும். இயந்திரம் மூலம் பாலிஷ் செய்யப்பட்ட அரிசியில் நார்ச்சத்துள்ள மேற்பரப்பு நீக்கப்பட்டு விடுகிறது. கைக்குத்தல் அரிசியில் மேற்பரப்பு நீக்கப்படாததால் அவற்றில் நார்ச்சத்து நிறைந்திருக்கும். சிவப்பரிசி, கறுப்புக்கவுனி அரிசி போன்ற பாரம்பர்ய அரிசிகளில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் அவற்றில் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருக்கிறது. ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிகள் தெளிக்கப்படாமல் இயற்கையாக விளைந்த அரிசியில் சோறாக்கி உண்பதன் மூலமும் அதை ஊற வைத்து பழைய சோறாக சாப்பிடுவதன் மூலமும் இரைப்பை மற்றும் குடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. பொதுவாகவே, நாம் சாப்பிடுகிற அரிசியில் சமைக்கப்பட்டு ஊற வைக்கப்பட்ட பழைய சோற்றில் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை மிகுந்து நல்ல விளைவை உண்டாக்குகிறது" என்றவர், பழைய சோறு குறித்த ஆராய்ச்சியின் பலன் குறித்துக் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறோம். இதன் முதற்கட்டமாகப் பழைய சோறு சாப்பிடுவதன் மூலம் இரைப்பை மற்றும் குடல்சார்ந்த நன்மைகள் குறித்து ஆய்வு செய்தோம். Irritable Bowel syndrome, crohn's disease, Ulcerative colitis, Mouth ulcers, Gastritis உள்ளிட்ட பிரச்னைகளுக்கு பழைய சோறு உண்பது தீர்வாக இருக்கிறது. இந்த ஆராய்ச்சியில் இவ்வகை நோயாளிகளுக்கு பழைய சோற்றைத் தொடர்ந்து சாப்பிடக் கொடுத்த பிறகு, அறுவை சிகிச்சை செய்யாமலேயே அவர்கள் பூரண குணமடைந்தனர். இந்த ஆராய்ச்சி முடிவை எங்களுடைய வெற்றியாகக் கருதுகிறோம். மேலும், பழைய சோற்றின் மாதிரிகளைத் தமிழக கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைத்து அவற்றில் என்னென்ன சத்துகள் எந்தெந்த அளவில் இருக்கின்றன என்று பரிசோதித்திருக்கிறோம். சிவப்பரிசி, கறுப்புக்கவுனி போன்ற நமது பாரம்பர்ய அரிசிகளும் இவற்றுள் அடக்கம். இந்த ஆய்வின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்" என்றவரிடம், `குடல் பிரச்னைகளைத் தாண்டி உடலின் மற்ற பிரச்னைகளுக்கு இது தீர்வாக இருக்குமா?' என்று கேட்டோம்.

``தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆராய்ச்சி முதற்கட்டம்தான். பழைய சோற்றைக் கொண்டு இன்னும் நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கின்றன. அது போக ஒவ்வோர் அரிசி வகையையும் ஆராய்ச்சிக்குட்படுத்திக் கொண்டிருக்கிறோம். பெண்களுக்கு ஏற்படும் முறை தவறிய மாதவிடாய் பிரச்னைகூட பழைய சோறு சாப்பிட்டு வந்ததன் மூலம் குணமானதாகத் தெரிவித்திருக்கின்றனர். இதற்கு அறிவியல் சாத்தியங்கள் இருக்கிறதா என்பதை அடுத்தகட்டமாக ஆராய்ச்சி செய்யவிருக்கிறோம்" என்றவர், ``பழைய சோற்றின் நன்மைகள் தொடர்பாக உலக அளவில் நடைபெறும் முதல் ஆராய்ச்சி இதுதான்" என்பதையும் குறிப்பிட்டார்.

நன்றி: விகடன்


Top Post Ad

Below Post Ad