ஒமைக்ரான் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் வருகிற 3-ம் தேதி முதல் 15 வயதில் இருந்து 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். அதேபோல் 10-ந்தேதி முதல் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த தடுப்பூசிகள் செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசியை முதல் 2 தவணைகளாக போட்டவர்களுக்கு அதே வகை தடுப்பூசி, பூஸ்டர் டோஸ்க்கும் பயன்படுத்தப்பட வேண்டும். 2வது தவணை தடுப்பூசி போட்டு 9 மாதங்கள் கடந்த பின் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
பூஸ்டர் தடுப்பூசி போட தகுதியானவர்கள் கோவின் கணக்கின் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். ஆன்லைன் மூலமாகவோ, அருகில் உள்ள சுகாதார நிலையங்களுக்கோ சென்று பூஸ்டர் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்துக்கொள்ளலாம்.
குழந்தைகளுக்கான தடுப்பூசியை பொருத்தவரை 2007-ம் ஆண்டு அல்லது அதற்கு முன் பிறந்த 15 வயது நிரம்பியவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். கோவின் தளத்தில் கணக்கு தொடங்கி தடுப்பூசி செலுத்துவதற்கு பதிவு செய்ய வேண்டும்.
15 வயது நிரம்பிய குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படவுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source Maalaimalar