தமிழ் மாதங்களில் மிகவும் கலர்ஃபுல்லான மாதம் என்றால் அது மார்கழி தான்.
பனிப்பொழிவு ஒரு பக்கம் நம்மை குளுகுளுவென்று வைத்திருக்கும். மறுபக்கம் காலை எழுந்தவுடன் ஒவ்வொருவரின் வீட்டு வாசலில் வண்ணக் கோலங்கள் நம் கண்களுக்கு புத்துணர்ச்சியினை ஏற்படுத்தும். கலர் பொடிகளை தூவி அலங்கரித்து கோலம் போடும் போது, சில வழிமுறைகளை கடைப்பிடித்தால் கோலம் நம் வீட்டு வாசலை மேலும் அழகாக்கும்.
*கோல மாவு வாங்கும்போது நன்கு வெளுப்பான மாவை வாங்க வேண்டும். கோலப் பொடி நைசாக இருக்க வேண்டும். ரவை போன்று இருந்தால் அதை சலித்து எடுத்துக் கொள்ளலாம்.
*கோல மாவுடன் அரிசி மாவு கலந்து கொண்டால் கையினால் கோலம் போடும் போதோ, கோலக் குழாயினால் போடும் போதோ தடையின்றி போட வரும்.
*வண்ணக்கோலம் இடுபவர்கள் சலித்த நைஸான மணலை சேர்த்துக் கொள்ள வேண்டும். வண்ணப் பொடியை அப்படியே உபயோகித்தால் காற்றில் பறந்து மற்ற நிறங்களுடன் கலந்துவிடும்.
*வீட்டில் மாக்கோலம் போடுபவர்கள் அரைத்த அரிசி மாவோடு சிறிதளவு ஒயிட் கம் சேர்த்து போட்டால் அழகாக புதுப்பொலிவோடு நீண்ட நாட்கள் அழியாமல் இருக்கும்.
*நீர் மேல் கோலம் போடுபவர்கள் தாம்பாளத்தில் சிறிதளவு விளக்கெண்ணெயைத் தடவி, நன்கு காய்ந்தவுடன் தேவையான டிசைனை போட்டு வண்ணப் பொடியைத் தூவினால் அழகாக இருக்கும்.
*பெயின்ட் கோலம் போடும் போது, ஒரு கலர் போட்டு நன்கு காய்ந்த பின் அடுத்த கலரை தீட்ட வேண்டும்.
*ரங்கோலி கோலம் போடுபவர்கள் நடுவில் ஒரு புள்ளியை வைத்துவிட்டு பின் கோலத்தை விரிவுபடுத்தினால், கோலம் கோணலாக வராது.
*மாக்கோலம் இட்டு நன்கு காய்ந்த பிறகு செம்மண்ணை பூச வேண்டும்.
*வீட்டின் உள்ளே பூக்கோலம் இடுபவர்கள் முதலில் டிசைனை வரைந்து விட்டு, அதன் மேல் மைதா பசை தடவிவிட்டு கோலம் போட்டால் அழியாமல் இருக்கும்.
*அரிசி மாவினால் கோலம் போடும் போது, அரிசி மாவுடன் சிறிதளவு சாதம் வடித்த கஞ்சியை சேர்த்துக் கொண்டால் கோலம் காய்ந்தவுடன் பளிச்சென்றும் இருக்கும்.
- அ.திவ்யா, காஞ்சிபுரம்.
கலைவாணி சொக்கலிங்கம்.
நன்றி குங்குமம் தோழி