Type Here to Get Search Results !

வருமான வரி கட்டுபவர்கள் அறிய வேண்டிய 4 வகை மதிப்பீடுகள்..!



நாமெல்லோரும் வருமான வரி கட்டுவது சரிதான். ஆனால், ஒவ்வொருவரும் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்துதான் ஆக வேண்டுமா என்கிற கேள்வியைப் பலரும் கேட்கலாம்.

இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. யாருக்கெல்லாம் வருமான வரி செலுத்த வேண்டிய அளவுக்கு வருமானம் உள்ளதோ, அத்தகையவர்களைப் பற்றிய வருமான விவரங்கள் அனைத்தும் வருமான வரித் துறையிடம் இருக்கும். தன்னிடம் உள்ள இந்த விவரங்களுடன் வரிதாரர்(Assessee) சமர்ப்பித்துள்ள வருமான விவரங்கள் பொருத்தமாக உள்ளதா என்பதைச் சரி பார்க்கத்தான் வருமான வரி கட்டியவர்கள் அனைவரும் வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கட்டாயப் படுத்தப்படுகிறார்கள்.

மதிப்பீட்டு ஆண்டு...

வரிதாரர் சமர்ப்பித்துள்ள வருமான வரி சேமிப்புக்கான முதலீட்டுச் செலவுகளை வருமானவரித் துறை தன்னிடம் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் நிகழ்வுதான் மதிப்பீடு (Assessment) எனப்படுகிறது. ஒரு நிதியாண்டைத் தொடர்ந்து வரும் அடுத்த ஆண்டில்தான் இந்த மதிப்பீடு செய்யப்படுவதால், நிதி ஆண்டுக்கு அடுத்த ஆண்டு மதிப்பீட்டு ஆண்டாகக் (Assessment Year) கருதப்படும்.

பல வகையான மதிப்பீடுகள்...

வருமான வரித் துறையினர் செய்யும் மதிப்பீடுகளில் பல வகை உண்டு. அந்த மதிப்பீடுகளைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

சுருக்கமான மதிப்பீடு (Summary Assessment பிரிவு 143(1))

இதைப் பொதுவான மதிப்பீடு என்றும்,மேலோட்டமான மதிப்பீடு என்றும் சொல்லலாம்.எப்படி எனில், தாக்கல் செய்யப்பட்டுள்ள வரி விவரங்களை மேலோட்டமாகப் பார்த்து, பார்த்த மாத்திரத்திலேயே கணக்கீடு தவறாக உள்ளதா, உரிமையில்லாத வரிச்சலுகை கோரப்பட்டுள்ளதா, ஏற்கத்தகாத இழப்புகள் (Disallownce of loss) கோரப்பட்டுள்ளதா, தணிக்கைக் குறிப்பில் அனுமதிக்கப்படாத செலவினங்களுக்கு தற்போது வரி செலுத்தப்பட்டுவிட்டதா அல்லது அந்தச் செலவுகள் வருமான வரிக் கணக்கீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் விடுபட்டுள்ளதா, படிவம் 26AS -படிவம் 16 மற்றும் 16-A ஆகியவற்றில் கண்டுள்ள கூடுதல் (Addition to Income) வருமானத்துக்கு வரியானது கணக்கிடப்படாமல் உள்ளதா என்பன போன்ற விவரங்கள் சரிபார்க்கப்படும்.

இவை மட்டுமன்றி, சில வரிச் சலுகைகள் வரித் தாக்கல் செய்ய (விதி 139(1)ன்-படி) நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு முன் வரித் தாக்கல் செய்தால் மட்டுமே கிடைக்கும்.பிரிவு 10AA,80-1A, 80-IB,80-IC, 80ID மற்றும் 80-IE ஆகியவை இந்த வகையைச் சேர்ந்தவை.இவ்வாறு கால தாமதமாகத் தாக்கல் செய்யப்பட்ட வரித்தாக்கலில் மேற்கண்ட பிரிவுகளின் படியான வரிச் சலுகை கோரப்பட்டுள்ளதா என்பதும் பரிசீலனைக்கு உள்ளாகும். இது சுருக்கமான மதிப்பீடு என்பதால், விரிவாக அலசி ஆராயப்படாது.பிழைகள், விடுபாடுகள், அளவுக்கு அதிகமான அல்லது தவறான வரிச் சலுகை உள்ளனவா, வரித் தாக்கல்களில் ஏதேனும் முரண்பாடு உள்ளதா என்று மட்டும் தீர்மானிக்கப்படும். அவ்வாறு தீர்மானித்த பின் செலுத்தப்பட்ட வரி அதிகமாக இருந்தால், ரீஃபண்ட் செய்யப்போவதாக வரிதாரருக்குத் தகவல் அனுப்பப்படும். மாறாக, வரி, வட்டி, அபராதம் போன்றவை வரிதாரர் செலுத்த வேண்டும் என்றாலும் தகவல் அனுப்பப்படும்.

வரிதாரர் வரித்துறையின் அறிவிப்பு கிடைக்கப்பெற்ற 30 நாள்களுக்குள் தனது பதிலை அனுப்பி, வரியை அல்லது வட்டியைச் செலுத்த ஒப்புக் கொள்ளலாம். அல்லது தான் கோரிய வரிச் சலுகை சரி என்ப தற்குச் சரியான காரணத்தைத் தெரிவித்து, மேலும் வரி, வட்டி, அபராதம் ஆகியவற்றைத் தவிர்க்கலாம். அல்லது ரீஃபண்ட் கோரலாம். பதில் அனுப்பத் தவறும்பட்சத்தில் வரித்துறை மேல் நடவடிக்கையை எடுக்கும்.

பிரச்னை ஏதும் இல்லாத இந்த மேலோட்டமான மதிப்பீடுதான் வரிதாரர்களால் பெரிதும் வரவேற்கப்படுவதாக உள்ளது. இந்த மதிப்பீட்டுக்கான காலம் நிதியாண்டு முடிவுற்றதிலிருந்து 9 மாதங்கள் ஆகும். இதற்கு உட்பட்ட காலத்தில் வரித் தாக்கலுக்கான பதில் கிடைத்துவிடும்.

ஆழ்ந்த பரிசீலனைக்கு உட்படும் மதிப்பீடு (Scrutiny Assessment பிரிவு 143(3))

இந்த வகை மதிப்பீடு சற்று விரிவாக இருக்கும். அதாவது, வரித்தாக்கல்களில் கண்டுள்ள வரி குறைத்துக் கணக்கிடப்பட வில்லை என்பதையும், வரிக் கழிவுகள் முதலானவை சரியான வைதான் என்பதையும் மதிப் பீட்டு அதிகாரி உறுதி செய்து கொள்வார். இதற்காகவே விரிவான மதிப்பீட்டை மேற் கொள்கிறார். அதாவது, செலுத் தப்பட்ட வரி குறைவானது அல்லது கோரப்பட்ட கழிவு மற்றும் இழப்புகள் அதிக மானவை அல்ல என்பதை உறுதி செய்ய வரிதாரர் உரிய ஆவணங் களுடன் மதிப்பீட்டு அதிகாரியை அவரது அலுவலகத் துக்கு வந்து தனது வரித்தாக்கல் விவரங்கள் சரியான வையே என்பதை நிரூபிக்க நோட்டீஸ் அனுப்பலாம். பிரிவு 143(2)-ன் கீழ் இத்தகைய நோட்டீஸ் நிதியாண்டு முடிவுற்ற ஆறு மாதங்களுக்குள் அனுப்பப்படும்.

வரிதாரர் தாமாகவோ, தன் பிரதிநிதியை அனுப்பியோ, மதிப்பீட்டு அதிகாரியிடம் தனது தரப்பு நியாயத்தை விவாதிக்கலாம். தனது வாதத்துக்கு ஆதாரமாக வரிதாரர் சமர்ப்பித்த ஆவணங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்து அதிகமாகச் செலுத்தப்பட்ட தொகையை ரீஃபண்ட் செய்ய அல்லது மேலும் வரியைக் கட்டுமாறு அறிவுறுத்தி மதிப்பீட்டு அதிகாரி எழுத்துபூர்வமாக ஆணையிட லாம். இந்த மதிப்பீட்டுக்கான காலக்கெடு நிதியாண்டு முடிவுற்ற தேதியிலிருந்து 12 மாதங்கள் ஆகும்.

சிறந்த தீர்ப்பு மதிப்பீடு (Best judgement Assessment-பிரிவு 144)

தாக்கல் செய்யப்பட்ட வரித் தாக்கல் பிழை, குறைபாடு அல்லது தாமதமாக இருக்குமேயானால், அத்தகைய வரித்தாக்கல்களுக்கு தனது சிறந்த தீர்ப்பின் (Best Judgement) அடிப்படையில் அந்த வரித் தாக்கலை மதிப்பீடு செய்வது மதிப்பீட்டு அதிகாரிக்கு கட்டாயக் கடமையாக (Obligatory)உள்ளது. பிரிவு 139(1)-ன்படி நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் சமர்ப்பிக்கப்படாத வரித்தாக்கல், காலம் கடந்த (Belated) வரித்தாக்கல் அல்லது பிரிவு 139(5)-ன் கீழான திருந்திய (Revised) வரித்தாக்கல் முதலானவற்றில் இந்த வகை மதிப்பீடு மேற்கொள்ளப்படுகிறது.

பிரிவு 142(1)-ன்படி, உரிய தேதிக்குள் வரித்தாக்கல் செய்யாத வரிதாரருக்கு மதிப்பீட்டு அதிகாரி நோட்டீஸ் அனுப்பி, வரித்தாக்கல் செய்யச் சொல்லலாம். ஆவணங்கள், கணக்குகளை வருவித்து பரிசீலிக்கலாம். வரிதாரரின்வாதம் ஏற்புடையதல்ல எனில், தனது சிறந்த தீர்ப்பின்படி, மதிப்பீடு செய்து மதிப்பீட்டின் அடிப்படையில் வரிதாரர் செலுத்த வேண்டிய தொகையைத் தீர்மானிக்கலாம்.

வருமானம் தவிர்த்ததாகக் கருதப்படும் மதிப்பீடு (Income Escaping Assessment -பிரிவு 147)

வரிதாரர் தனது வருமானத்தைக் காட்டாமல் தவிர்த்துள்ளதாக மதிப்பீடு அதிகாரி கருதினால், இந்த வகை மதிப்பீடு மேற்கொள்ளப்படும். அதாவது, நடப்பு நிதியாண்டிலோ, கடந்துபோன நிதியாண்டிலோ ஒரு வரிதாரரின் வருமானம் மதிப்பீட்டுக்கு வராமல் தப்பித்திருந்தால், அதைப் பற்றிய தகவல் பின்னர் கிடைக்கப்பெறும் பட்சத்தில் இந்த மதிப்பீடு செய்யப்படும்.வருமானவரி பிரிவு 147-ன்படியான இந்த மதிப்பீடு நிதியாண்டு முடிவடைந்த 12 மாதங்களுக்குள் செய்யப்படும். சில நிகழ்வுகளில் 12 மாதங்களுக்கு மேலும் நீட்டிக்கப்படலாம்.

வரிதாரர் செய்ய வேண்டியது என்ன?

மேற்கண்ட மதிப்பீடுகளின்படியான மதிப்பீட்டு அதிகாரியின் ஆணை தனக்கு திருப்தி இல்லை என எண்ணுகிற வரிதாரர் உயர் அதிகாரிக்கு மேல் முறையீடு செய்யலாம். என்றாலும், வரித் தாக்கலுக்கு முன் மேற்கண்ட அம்சங்கள் நடைமுறையில் உள்ளதைத் தெரிந்து செயல்படுவது அவசியம். நமது வரித் தாக்கல் எந்த வகை மதிப்பீட்டுக்கு உள்ளாகும் என்பதைப் பொறுத்திருந்துதான் தெரிந்துகொள்ள முடியும்.
Tags

Top Post Ad

Below Post Ad