விறகுக் கட்டோட விரைவாப் போறவளே
ஓரக் கண்ணால ஒய்யாரமாப் பார்த்தவளே
பாரம் பகுந்துக்க மாமன் நானிருக்க
ஏதும் பேசாம ஏன்தான் போகுறியோ?
சுமட்டோட வலியுனக்குத் தெரியாமப் போறதுக்கு
சும்மாடு வச்சிருக்க அதுபோலக் கண்ணம்மா
உன்னோட வாழ்க்கையிலச் சும்மாடா நானிருப்பேன்
சம்மதம்னு சிரிப்பாலச் சொல்லிடடி செல்லம்மா.
உங்காலில் முள்ளுன்னா எந்நெஞ்சு வலிக்குமடி
வலியால நீதுடிச்சா எந்துடிப்பு நிக்குமடி
பட்டதெல்லாம் போதுமடி பத்திரமாப் பாக்கிறேன்டி
எல்லாமா நானிருக்கேன் என்னவளா வந்திடடி.
*கிராத்தூரான்