நாடு முழுவதும் நாட்டின் முதல் துணை ஜனாதிபதியும் இரண்டவது ஜனாதிபதியுமான பேராசிரியர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவர் பிறந்த தினம் ஆசிரியர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான இன்று அவரது மகள் வழி பேரன் கேசவ் தேசி ராஜு இயற்கை எய்தினார். 66 வயதான கேசவ் தேசிராஜு இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னையில் காலமானார். 1978 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான கேசவ், அரசு அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகள் வகித்துள்ளார். பல்வேறு பொறுப்புகளில் இருந்தாலும் முன்னாள் மத்திய சுகாதார துறை செயலராகவே அனைவராலும் அறியப்பட்டார். 2015ஆம் ஆண்டில் ஓய்வுபெறுவதற்கு முன்னர் கடைசியாக அவர் மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு செயலாளராகப் பணியாற்றிருந்தார்.
கொள்கை ஆராய்ச்சி மையத்தின் நிர்வாகக் குழுவில் இடம்பெற்றிருந்த கேசவ், மனநல ஆரோக்கிய மசோதாவை உருவாக்கியவர்களில் முதன்மையானவர். 2016ஆம் ஆண்டு எவ்வித எதிர்ப்புமின்றி நாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேறியது குறிப்பிடத்தக்கது. உயர் கல்வியை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்ற இவர், இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் அரசுத் துறைகளில் செயலராகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர். ஓய்வுபெற்ற பின் இந்திய மக்கள் தொகை அறக்கட்டளை தலைவராகவும் இருந்துள்ளார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.