ஆண்களுடன் போட்டி போட்டுக்கொண்டு உடல் எடையைக் குறைக்க நினைக்கும் பெண்ணா நீங்கள்? உங்கள் ஆண் நண்பர் அல்லது சகோதரருடன் ஒன்றாக உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இறங்கி, இருவரும் ஒரே மாதிரி உடற்பயிற்சி மற்றும் டயட் முறையைப் பின்பற்றினாலும் அவர்களுடைய உடல் எடை உங்களைவிட விரைவாகக் குறைவதைப் பார்த்து கவலைப்படுகிறீர்களா?
கவலைப்பட்டாலும் உண்மை அதுதான். சில இயற்கைக் காரணங்களால் பெண்களைவிட ஆண்களுக்கு உடல் எடை விரைவாகக் குறையும் என்கின்றனர் பயிற்சியாளர்கள். அதிலும், உடல் எடையை குறைக்கும் பெண்களைவிட ஆண்களுக்கு அதிக நன்மைகள் கிடைப்பதாக கூறுகின்றனர்.
மெலிந்த தசைகள்:உடல் எடையைக் குறைப்பது என்பது உணவின்மூலம் சேரும் கலோரிகளை உடற்பயிற்சி மூலம் குறைப்பது. சுருக்க திசுக்களால் ஆன மெலிந்த தசைகள் கொண்ட உடலமைப்பு உள்ளவர்களுக்கு கலோரிகளை எரிப்பது சுலபமான செயல். பெண்களின் உடலைவிட ஆண்களின் உடலில் மெலிந்த தசைகள் அதிகம். இதனால் கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டு பெண்களைவிட ஆண்களுக்கு உடல் எடை எளிதாகக் குறைகிறது. சுருக்க திசுக்களை அதிகரிக்க பெண்கள் அதிக உழைக்க வேண்டியிருக்கும்.
மெட்டபாலிசம் (வளர்சிதை மாற்றம்):எடைக் குறைப்பில் மெட்டபாலிசம் முக்கியப் பங்கு வகிக்கிறது. மெட்டபாலிசம் அதிகமாக இருக்கும்போது எடைக்குறைப்பும் வேகமாக நடக்கும். ஆனால் மெட்டபாலிசமும் மெல்லிய தசைகளுடன் தொடர்புடையதுதான் என்பது பலருக்கும் தெரியாது. மெல்லிய தசைகள் அதிகம் இருப்பவர்களுக்கு மெட்டபாலிசம் அதிகமாக இருக்கும். இதனால்தான் ஆண்களுக்கு எடைக் குறைப்பு மேலும் எளிதாகிறது. பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களால் அதிக நேரம் பயிற்சிகளில் ஈடுபடவும் முடிகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
கொழுப்பு சேரும் பகுதி:ஆண், பெண் இருவருக்கும் கொழுப்பு சேரும் பகுதி வெவ்வேறு என்றாலும் இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஆண்களுக்கு பொதுவாக வயிற்றுப்பகுதிகளிலும், பெண்களுக்கு பெரும்பாலும் பின்புற இடுப்பு மற்றும் தொடைப் பகுதிகளிலும் எடை சேருகிறது. வயிற்றில் சேரும் கொழுப்பை குறைப்பது எளிது என்றாலும், அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். இருந்தாலும், குறைந்த அளவு உடற்பயிற்சிகூட பெண்களைவிட ஆண்கள் சற்று அதிக கிலோக்களை குறைக்க உதவும்.
ஹார்மோன்கள்:ஹார்மோன்களும் பெண்கள் எடைக் குறைப்பில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆண்களைவிட பெண்கள் 6%-ல் இருந்து 11% அதிக எடையுடன் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. பெண்களுக்கு அதிகம் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் என்னும் ஹார்மோன், உணவுக்குப் பிறகு கலோரிகளை எரிக்கும் தன்மையை வெகுவாகக் குறைக்கின்றன. அதேசமயம் உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவு சிறிது குறைந்தாலும் அதுவும் பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணமாக அமைகிறது. குறிப்பாக மாதவிடாய் காலங்களில் பெண்கள் இந்தப் பிரச்னையை அதிகளவில் சந்திக்கின்றனர்.
இனிப்பின் மீதான ஈர்ப்பு:உணவின்மீதான ஈர்ப்பும் உடல் எடை அதிகரிக்க காரணமாகிறது. அதாவது Emotional eating என்று சொல்லக்கூடிய, உணவைக் காணும்போது ஏற்படும் ஈர்ப்பால் உணர்ச்சிவசப்பட்டு சாப்பிட்டுவிடுதல் எடை அதிகரிப்புக்கு காரணமாகிறது என்கின்றனர் பயிற்சியாளர்கள்.
குறிப்பாக, இனிப்புகளைக் காணும்போது ஆண்களைவிட பெண்களுக்கு ஈர்ப்பு அதிகமாவதால் அவர்களால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தமுடியாமல் போகிறது. குறிப்பாக மாதவிடாய் காலங்களில் உணர்வுகளை அதிகம் கட்டுப்படுத்த முடியாமல் போகிறது என்கின்றனர் நிபுணர்கள். அதிலும் குறிப்பாக ஒரு டயட் முறையை பின்பற்றும்போது மற்ற உணவுகளின்மீதான நாட்டம் ஆண்களைவிட பெண்களுக்கு அதிகமாக இருக்கிறது என்கின்றனர் நிபுணர்கள். அதேசமயம் ஆண்கள் தங்களுடைய டயட்டுகளை முறையாக பின்பற்றுவதில் மிகவும் கவனத்துடன் இருப்பதாகவும் கூறுகின்றனர்.
தகவல் புதிய தலைமுறை