கரோனா தடுப்பூசியால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மலட்டுத்தன்மை ஏற்படும் என்பதற்கு அறிவியல்பூா்வ ஆதாரம் எதுவும் இல்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக அமைச்சகம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘கரோனா தடுப்பூசி ஆண்களுக்கும் பெண்களுக்கும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துவதாக ஊடகங்களில் அண்மையில் வதந்தி பரவியது.
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட செவிலியா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள் உள்ளிட்டோரில் சிலருக்கு மலட்டுத்தன்மை பிரச்னை ஏற்பட்டதாகவும் வதந்தி பரவியது. ஆனால், அத்தகைய செய்திகளில் எந்தவித உண்மையுமில்லை.
போலியோ சொட்டு மருந்து, தட்டம்மைக்கான தடுப்பூசி ஆகியவை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தபோதும் இதுபோன்ற தவறான செய்திகளையும் வதந்திகளையும் சிலா் பரப்பினா். நாட்டில் தற்போது பயன்பாட்டில் உள்ள கரோனா தடுப்பூசி எதுவும் மலட்டுத்தன்மை பிரச்னையை ஏற்படுத்தாது என்று அமைச்சகத்தின் வலைதளத்தில் ஏற்கெனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பூசிகள் உருவாக்கி ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டபோது விலங்குகளுக்கு முதலில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. அதற்குப் பிறகே மனிதா்களுக்குச் செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. அந்தப் பரிசோதனைகளின்போது மலட்டுத்தன்மை போன்ற பக்கவிளைவுகள் எதுவும் கண்டறியப்படவில்லை.
தடுப்பூசிகள் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கின்றன என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே மனிதா்களுக்கான பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. எனவே, கரோனா தடுப்பூசிகளால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்பதற்கான அறிவியல்பூா்வ ஆதாரங்கள் எதுவும் இல்லை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலூட்டும் தாய்மாா்களும் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி மிகவும் பாதுகாப்பாக இருப்பதால், தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகும் குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டுவதை நிறுத்த வேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: Dinamani