கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிலிப்பின்ஸ் நாட்டு மக்களுக்கு அந்நாட்டு அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகம் முழுவதும் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றன.
இந்நிலையில் பிலிப்பின்ஸில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தயாராக இல்லாத பொதுமக்கள் கைது செய்யப்படுவர் என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இதுதொடர்பாக திங்கள்கிழமை இரவு செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டே,“நாட்டில் ஒரு நெருக்கடி நிலை நிலவுகிறது. தேசிய அவசரநிலை உள்ள நிலையில் நீங்கள் தடுப்பூசி போட விரும்பவில்லை என்றால், நான் உங்களை கைது செய்து தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.
மேலும், “தடுப்பூசி போட நீங்கள் ஒப்புக் கொள்ளாவிட்டால், பிலிப்பின்ஸை விட்டு வெளியேறுங்கள்” என்று அவர் கூறினார்