தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் உள்ள சட்டமன்ற அரங்கில் கவர்னர் உரையுடன் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வருகிற 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, பொன்முடி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு உள்பட அமைச்சர்களும், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களும் என 124 பேர் பங்கேற்றனர்.
தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. உள்பட நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். மாலை 5.15 மணிக்கு தொடங்கிய கூட்டம் மாலை 5.45 மணியளவில் முடிவடைந்தது.
கூட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கி பேசியதாக வெளியான தகவல் வருமாறு:-
தி.மு.க. ஆட்சி நீடித்து நிலைத்திருக்க வேண்டும். நமக்கு வாக்கு அளிக்காத மக்களும் இவர்களுக்கு வாக்களிக்காமல் பெரிய தவறு இழைத்து விட்டோமே? என்று வருந்தும் அளவுக்கு நம்முடைய மக்கள் பணி சிறப்பாக இருக்க வேண்டும்.
பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழியான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தவறாமல் பின்பற்றி மக்கள் பணியில் ஈடுபட வேண்டும். அடுத்த சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும் வகையில் நம்முடைய இந்த 5 ஆண்டு கால செயல்பாடுகள் அமைய வேண்டும்.
சட்டசபையின் மாண்பை காப்பாற்றும் வகையில் செயலாற்ற வேண்டும். சட்டசபை கூட்டங்கள் நடைபெறும்போது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அதிக கேள்விகள் எழுப்ப வேண்டும்.
எனவே அரசு துறைகளின் தரவுகளையும், தொகுதி மக்களின் குறைகள், பிரச்சனைகள் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். சட்டசபையில் எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகள், முன் வைக்கும் பிரச்சனைகளுக்கு மூத்த உறுப்பினர்கள் மிகவும் கவனமாகவும், சிறப்பாகவும் பதில் அளிக்க வேண்டும் என அவர் பேசியதாக கூறப்படுகிறது.