தருமபுரி நகராட்சி அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மாதையன் (வயது 50).
இவருக்கு கொரோனா தொற்றால் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவ செலவுக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டு, பேஸ்புக்கில் அவரது புகைப்படத்துடன் நேற்று தகவல் வெளியாகியது.
தருமபுரி நகராட்சியில் பொது சுகாதார ஓட்டுநராக பணியாற்றும் கோவர்த்தன் (வயது 27) என்பவர் இதை சமூக ஊடகத்தில் பார்த்துள்ளார். பின்னர் அந்த பதிவில் இடம் பெற்றிருந்த வங்கிக் கணக்குக்கு ரூ.35 ஆயிரத்தை கோவர்த்தன் ஆன்-லைன் முறையில் அனுப்பி வைத்துள்ளார்.
பின்னர் வருவாய் ஆய்வாளர் மாதையனிடம், ஓட்டுநர் கோவர்த்தன் போனில் நலம் விசாரித்து போது அவரது உடல் நலம் குறித்து பொய்யான தகவலை பதிவிட்டு, வடநாட்டு கும்பல் மோசடி செய்து பணத்தை ஏமாற்றியது தெரியவந்தது.
எனவே, இது தொடர்பாக தருமபுரி மாவட்ட, சைபர் கிரைம் பிரிவில் கோவர்த்தன் புகார் அளித்தார். இதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
மேலும் வடமாநிலத்தை சேர்ந்த கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டது குறித்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த வங்கி கணக்குக்கு பணம் சென்று இருப்பதும், மொபைல் எண்ணும் அதே மாநிலத்தை சேர்ந்தது என தெரியவந்தது.