Type Here to Get Search Results !

உடன்பிறப்புகள் தினம் - கிராத்தூரான் கவிதை




தங்கையின் கை பிடித்து பள்ளி செல்லும் அண்ணனை,
தம்பியின் கை பிடித்து
சாலையைக் கடக்கும் அக்காவை
காண்கின்ற வேளையிலே
ஒரு நிமிடம் மனது சொல்லும்
'இந்தப் பாசம் இறுதிவரை நிலைக்க வேண்டும் இறைவா!
பாசமுள்ள நெஞ்சங்களைக் காக்க வேண்டும் இறைவா!'

தங்கையின் கை பிடித்து பள்ளி சென்ற நினைவோ?
தம்பிகளைக் காக்கின்ற அக்காமார் பரிவோ?
பாசமுள்ள உறவுகளை நான் பெற்ற நிறைவோ?
அன்பிற்கு அடிமையாகும் இறை தந்த குணமோ?
எது ஒன்றோ தூண்டிவிட வேண்டி நிற்பேன் நானும்.

உறவுகளைப் பேணி நிற்கும்
என் பாரதத்தின் பண்பு,
பாசத்தைக் காட்டி நிற்கும்
தமிழகத்து மாண்பு
பாரினிலே எங்குமிலாப் பண்பாட்டின் சிறப்பு
சீர்குலைந்து போகாமல் சிறக்கவேண்டும் இறைவா
பார்போற்ற பாரதமும் உயரவேண்டும் இறைவா,
நாளும் உயரவேண்டும் இறைவா.

*கிராத்தூரான்

Top Post Ad

Below Post Ad