Type Here to Get Search Results !

மீண்டும் கடைசி கட்டத்தில் மாறிய ஆட்டம்: ஹைதராபாத்தை வீழ்த்தியது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்


ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (ஆட்டத்தில்) சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதன்படி முதலில் பேட் செய்த பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது.

150 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஹைதராபாத் தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர், ரித்திமான் சாஹா களமிறங்கினர். முதல் ஓவரை முகமது சிராஜ் மெய்டன் ஓவராக வீசி அசத்தினார். இந்த நெருக்கடியிலிருந்து மீளாத சாஹா 9 பந்துகளில் 1 ரன்னுக்கு சிராஜின் அடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார்.

வார்னர் - மணீஷ் பாட்னர்ஷிப்:

இதையடுத்து, கைல் ஜேமிசன் வீசிய 4-வது ஓவரில் மணீஷ் பாண்டே ஒரு சிக்ஸர், வார்னர் 1 பவுண்டரி, 1 சிக்ஸர் அடித்து அசத்த அந்த ஓவரில் 17 ரன்கள் கிடைத்தன. விளைவு பவர் பிளே முடிவில் ஹைதராபாத் அணி 1 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து, பாண்டே பாட்னர்ஷிப்புக்கு ஒத்துழைப்பு தர வார்னர் துரிதமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். இதனால் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் ஹைதராபாத் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.

10 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 1 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் சேர்த்து நல்ல நிலையில் இருந்தது.

தொடர்ந்து வார்னரும் தனது 32-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். ஆனால், ஆட்டத்தின் முக்கியமான தருணத்தில் வார்னர் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

வார்னர், மணீஷ் இணை 2-வது விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்தது.

அவர் ஆட்டமிழக்கும்போது கடைசி 41 பந்துகளுக்கு 54 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. வார்னர் விக்கெட்டுக்குப் பிறகு 3 ஓவர்களுக்குப் பெரிய ரன் போகவில்லை.

ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள்:

இதனால், கடைசி 4 ஓவர்களில் ஹைதராபாத் வெற்றிக்கு 35 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது.

இந்த நிலையில் ஷபாஸ் அகமது 17-வது ஓவரை வீசினார். முதல் பந்தில் ஜானி பேர்ஸ்டோவ் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே மணீஷ் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் அப்துல் சமத் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள் விழுந்ததால் ஆட்டம் பெங்களூரு பக்கம் திரும்பியது.

கடைசி 3 ஓவர்களில் ஹைதராபாத் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டன. ஹர்ஷல் வீசிய அந்த ஓவரின் முதல் 5 பந்துகளில் 8 ரன்கள் போனாலும் கடைசி பந்தில் விஜய் சங்கர் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

கடைசி 2 ஓவர்களில் ஹைதராபாத் வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்டன. 19-வது ஓவரை சிராஜ் வீசினார்.ஆட்டத்தில் முதல் பந்தை எதிர்கொண்ட ரஷித் கான் சிக்ஸர் அடித்து அசத்தினார். ஆனால், அதே ஓவரின் 3-வது பந்தில் ஜேசன் ஹோல்டர் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பிறகு, பவுண்டரிகள் போகாததால் கடைசி ஓவரில் ஹைதராபாத் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டன.

முதல் 2 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே கிடைத்தாலும், 3-வது பந்துநோபாலாக வீசப்பட ரஷித் கான் அதை பவுண்டரிக்கு விரட்டினார். இதனால், கடைசி 4 பந்துகளில் ஹைதராபாத் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டன. எனினும், ஹர்ஷல் பட்லே ஃப்ரீ ஹிட் பந்தை சிறப்பாக வீசியதால் ரன் ஏதும் கிடைக்கவில்லை. அடுத்த பந்தில் இரண்டாவது ரன்னை எடுக்க முயன்று ரஷித் கான் (9 பந்துகள் 18 ரன்கள்) ஆட்டமிழந்தார்.

கடைசி 2 பந்துகளில் ஹைதராபாத் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டன. ஆனால், ஷபாஸ் நதீம் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம், பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூரு தரப்பில் ஷபாஸ் அகமது 3 விக்கெட்டுகளையும், ஹர்ஷல் படேல் மற்றும் முகமது சிராஜ் தலா2 விக்கெட்டுகளையும், ஜேமிசன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.


Top Post Ad

Below Post Ad