அதிகரித்து வரும் கரோனா பெருந்தொற்றினால் வருமான வரி தொடர்பான பல்வேறு செயல்பாடுகளுக்கான கால அவகாசத்தை ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் கோவிட்-19 பெருந்தொற்றின் அதிகரிப்பால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வரி செலுத்துவோர், வரி ஆலோசகர்கள் மற்றும் இதர பங்குதாரர்களின் கோரிக்கையை ஏற்று, நேரடி வரி - விவாதங்களில் இருந்து விடுபட்டு நம்பிக்கையூட்டுதல் சட்டம் 2020 இன் கீழ் பல்வேறு அறிவிக்கைகளின் வாயிலாக முன்னதாக 2021 ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டிருந்த கால அவகாசத்தை அரசு இன்று மேலும் நீட்டித்துள்ளது.
வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள்(சில விதிகளில் தளர்வுகள் அளிக்கும்) 2020-இன் கீழ் கீழ்க்காணும் செயல்களுக்கு முன்னதாக 2021 ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டிருந்த கால அவகாசத்தை ஜூன் 30 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
வருமான வரி சட்டம் 1961 இன் கீழ் மதிப்பீடு அல்லது மறுமதிப்பீட்டிற்கான எந்த ஒரு உத்தரவையும் நிறைவேற்றுவதற்கான கால அவகாசம், பிரிவு 153 அல்லது பிரிவு 153 பி இன் கீழ் வழங்கப்படும் கால அவகாசம்
சட்டப்பிரிவு 144 சி இன் துணைப் பிரிவு (13) இன் கீழ் பூசல்கள் தீர்வு குழுவின் வழிகாட்டுதலின் படி ஓர் உத்தரவை நிறைவேற்றுவதற்கான கால அவகாசம்
வருமான மதிப்பீட்டில் இடம்பெறாத மதிப்பீட்டை மீண்டும் மதிப்பீடு செய்வதற்கு சட்டப் பிரிவின் கீழ் அறிவிக்கை வெளியிடுவதற்கான கால அவகாசம்
நிதிச் சட்டம் 2016-இன் பிரிவு 168-இன் துணைப்பிரிவு (1) இன் கீழ் சமப்படுத்தல் வரி செயலாக்கத்தை அறிவிப்பதற்கான கால அவகாசம்
ஆகியவை ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.