சென்னையில் நாளுக்கு நாள் கரோனா அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த 15 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் மண்டலக் குழுக்களை தமிழக அரசுஅமைத்துள்ளது. அக்குழுக்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தலைமையில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தினமும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 150-க்கும் கீழ் குறைந்திருந்தது. அடுத்த 45 நாட்களில் தினமும் 1,500 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதைக் கட்டுப்படுத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கு தலா 1 குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுக்கள் நாளைமுதல் களத்தில் பணியை தொடங்குகின்றன.
மாநகராட்சி சார்பில் முதல்கட்டமாக வீடு வீடாகச் சென்று உடல் வெப்பநிலை, ரத்த ஆக்சிஜன் அளவு பரிசோதனை செய்ய 6 ஆயிரம் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 1.15 லட்சம் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் மருத்துவ குழுக்கள் மூலம் சிறப்பு முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது கரோனா நோயாளிகள், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்வது அதிகமாக உள்ளது. அவர்கள் வீட்டை விட்டு வெளியில் வர அனுமதி இல்லை. அவர்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய களப்பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதன் மூலம் அவர்களால் தொற்று பரவுவதை வெகுவாக குறைக்க முடியும்.
சென்னையில் 1 லட்சத்து 75 ஆயிரம் கடைகள் உள்ளன. அவை அனைத்தையும் கண்காணிப்பது சிரமம். அபராதத்தை கடுமையாக்கினால் மட்டுமே தொற்றை தடுக்க முடியும்.
அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இலக்கு நிர்ணயித்தும் அபராதம் வசூலிக்கப்பட உள்ளது. இதுவரை ரூ.3 கோடியே 75 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 39 ஆயிரத்து தெருக்கள் 3 நோயாளிகளுக்கு மேல் இருக்கும் 600 தெருக்களும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்தான். ஒரே தெருவில் 10 பேருக்கு மேல் தொற்று ஏற்பட்டிருந்தால், அங்கு போக்குவரத்து தடை செய்யப்படும். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், விதிகளை மீறி வெளியில் வருவது தெரியவந்தால், கரோனா சிகிச்சை மையத்துக்கு அனுப்பப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாநகர கூடுதல் காவல் ஆணையர் த.செந்தில்குமார், மாநகராட்சி துணை ஆணையர்கள் ஆல்பி ஜான் வர்கீஸ், ஜெ.மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதனிடையே சென்னை மாநகராட்சி ஆணையர், அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் பிறப்பித்துள்ள உத்தரவில், கரோனா பரவல் தடுப்பு விதிகளை மீறினால் அரசு உத்தரவின்படி அபராதம் வசூலிக்க வேண்டும். அதன்படி, தனிமைப்படுத்துதல் விதிகளை மீறினால் ரூ.500, பொது இடங்களில் முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.200, பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500, பொது இடங்களில் கூட்டம் கூடினால், சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் ரூ.500, சலூன்கள், ஸ்பா, உடற்பயிற்சி நிலையங்கள், வணிக நிறுவனங்களில் விதிமுறைகளை மீறினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும். 15 மண்டலங்களும் சேர்த்து நாளொன்றுக்கு ரூ.10 லட்சம் அபராதம் வசூலிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி அபராதம் வசூலிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.