வரும் ஜூன் 1-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் தங்க ஆபரணங்களுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நுகா்வோர் விவகார செயலா் லீனா நந்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தங்க ஆபரணங்களுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான காலக்கெடு ஏற்கனவே பல முறை ஒத்திப்போடப்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் காலக்கெடு நீட்டிப்பு கோரி இதுவரை கோரிக்கைகள் எதுவும் வரவில்லை. இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் பி.ஐ.எஸ் ஏற்கனவே முழு உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறது.
ஹால்மார்க்கிங் செய்ய நகை விற்பனையாளர்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் பி.ஐ.எஸ் தீவிரமாக பணியாற்றி வருகிறது. எனவே, நடப்பாண்டு ஜூன் 1-ம் தேதியிலிருந்து விற்பனை செய்யப்படும் தங்க நகைகள் மற்றும் கலைப்பொருள்களுக்கு ஹால்மார்க் முத்திரையிடுவது கட்டாயமாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.