Type Here to Get Search Results !

ஆதாரிலிருந்து மொபைல் எண் எடுத்ததா பாஜக? - தேர்தலை ஏன் தள்ளி வைக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் கேள்வி


புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைவர் ஆனந்த் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், புதுச்சேரிக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மத்தியில் ஆளும் பா.ஜ. க தொகுதி வாரியாக வாட்ஸப்  குழுக்களைத் தொடங்கி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். 

பொதுவாக வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் மட்டுமே இருக்கும். அதில் மொபைல் எண்கள் இருக்காது. இந்த நிலையில் ஆதார் ஆணையத்தில் இருந்து வாக்காளர்களின் மொபைல் எண்களை பெற்று வாட்ஸ் அப் குழுவைத் தொடங்கி பாஜகவினர் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.இதற்கு தடை விதிக்க வேண்டும். 

இதுதொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கூறி இருந்தார்.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், மனுதாரர்  புகார் குறித்து சைபர் குற்றப்பிரிவு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும், வாக்களர்களுக்கு மொத்தமாக எஸ் எம் எஸ் மூலம் பிரசாரம் செய்ய பாஜகவினர் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரவில்லை. அனுமதி பெறாமல் எஸ் எம் எஸ்  அனுப்பியது குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என விளக்கம் கேட்டு பாஜகவுக்கு கடந்த மார்ச் 7-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.

ஆனால் பாஜக தரப்பில் இதுவரை பதிலளிக்கவில்லை. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், புதுச்சேரி வாக்காளர்களின் மொபைல் எண்கள் பாஜகவினருக்கு எப்படி கிடைத்தது? என விசாரிக்க ஆதார் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், பாஜகவினர் மீதான புகாரை விசாரித்து முடிக்கும் வரை புதுச்சேரியில் தேர்தலை ஏன் தள்ளிவைக்க கூடாது? என கேள்வி எழுப்பினர்.

பின்னர் இந்த முறைகேடு குறித்து ஆதார் ஆணையம் மற்றும் தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். விசாரணை நியாயமான முறையில் நடப்பதை உறுதி செய்து விரைவில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குஒத்திவைத்தனர்.

Source: Dinathanthi

Top Post Ad

Below Post Ad