இது குறித்து பள்ளிக்கல்விக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசியபோது, “ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் ஒரு பள்ளியில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்றால், அதை வைத்து பதற்றத்தை ஏற்படுத்தக்கூடாது. அங்கு கொரோனா தொற்று எப்படி ஏற்பட்டது என்ற காரணத்தைக் கண்டறிந்து சொல்ல வேண்டும். கொரோனா வைரஸைப் பொருத்தவரையில், நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் பயப்பட வேண்டியதில்லை.
எனவே, நோய் எதிர்ப்பு சக்திக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவு அவசியம். பள்ளி மாணவர்களுக்கு அப்படியான உணவு வழங்கப்படுவதை அரசு உத்தரவாதம் செய்திருக்கிறதா? காலையிலும் மாணவர்களுக்கு பள்ளிகளில் சத்துமிக்க உணவு வழங்கப்படுகிறதா? தடுப்புக்கான பாதுகாப்பு என்ன? சுகாதாரத்தை மேம்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்கிற கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும்” என்றார்.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் பேசியபோது, “பள்ளிக்கூடங்களில் கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்று ஏற்பட்ட மாணவர்களுடன் தொடர்பில் இருந்த கிராமங்கள் தொடர் கண்காணிப்பில் இருக்கின்றன” என்றனர்.
கொரோனா லாக் டெளனிலிருந்து விடுபட்டு மக்கள் அன்றாடத் தேவைகளுக்காக பொது இடங்களுக்கு வருவதும் மக்களோடு மக்கள் கலந்து பழகுவதும் தேவைதான். ஆனால் மாணவர்கள் கூடும் பள்ளிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அரசு மற்றும் ஆசிரியர்களின் கடமையாகும். மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மாற்று வழிகளை கல்வியாளர்களைக் கலந்தாலோசித்து ஏற்படுத்துதல் என்று துரித கதியில் அரசு இயந்திரம் செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.
இந்தநிலையில், 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. அடுத்த உத்தரவு வரும்வரை விடுமுறை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் வழக்கம்போல நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source Vikatan