Type Here to Get Search Results !

சென்னையில் செல்போன் சார்ஜர் வெடித்ததால் எரிந்து தரைமட்டமான குடிசைவீடு


சென்னையை அடுத்த பல்லாவரத்தில் செல்போன் சார்ஜர் வெடித்ததால் குடிசை வீடு ஒன்று பற்றி எரிந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பல்லாவரம் பம்மல் அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் பால தேசிங்கு ராஜா. அவருக்குச் சொந்தமான குடிசை வீட்டை வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கு வாடகைக்கு விட்டிருந்தார். இந்நிலையில், இன்று காலை வீட்டில் தங்கி இருந்த மற்ற அனைவரும் வேலைக்காக வெளியில் செல்ல, ஒருவர் மட்டும் குளித்துக் கொண்டிருந்தார்.அப்போது, திடீரென, குடிசை வீடு தீப்பற்றி எரியத் தொடங்கியது. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனாலும் தீயை அணைக்க முடியவில்லை. இதனையடுத்து தாம்பரம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னரே , வீட்டிலிருந்த பணம், துணிமணிகள் ஆகியவை முற்றிலுமாக எரிந்து சாம்பலாயின. தகவல் அறிந்து விரைந்து வந்த பல்லாவரம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், வீட்டில் இருந்த செல்போன் சார்ஜர் வெடித்ததில் குடிசை வீடு தீ பற்றி எரிந்தது தெரிய வந்துள்ளது.
இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் உயிர் சேதமோ, படுகாயமோ ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு, இளைஞர்களுக்கு ஆறுதல் கூறினார்.

Top Post Ad

Below Post Ad