மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) புதிதாக மறுசீரமைக்கப்பட்ட இணைப்பு நடைமுறை குறித்து பள்ளிகளுக்கு தெரியப்படுத்த தொடா்ச்சியான பயிற்சி அமா்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து சிபிஎஸ்இ செயலா் அனுராக் திரிபாதி கூறியுள்ளதாவது:
புதிய இணைப்பு, மேம்படுத்துதல், இணைப்பு நீட்டிப்பு போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் அனுமதி கோரி வரும் விண்ணப்பங்களை ஆராய்ந்து முடிவெடுப்பதில் சிபிஎஸ்இ மறுசீரமைக்கப்பட்ட புதிய இணைப்பு நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய செயல் முறை குறித்து பள்ளிகளுக்கு தெரியப்படுத்தவும், அவற்றின் சந்தேகங்களை தீா்க்கவும் சிபிஎஸ்இ பயிற்சி அமா்வுகளை நடத்தவுள்ளது. இணையம் மூலமாகவும் இதுகுறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்குகள் நடத்தப்படும்.
மாா்ச் 9 முதல் 13-ஆம் தேதியிலிருந்து இந்த பயிற்சி அமா்வுகள் நடத்தப்படவுள்ளன. இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பும் பள்ளிகள் சிபிஎஸ்இ வலைதளத்தில் மாா்ச் 1 முதல் 8-ஆம் தேதி வரையில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றாா் அவா்.
உள்நாடு மற்றும் வெளிநாடு மொத்தம் 24,930 பள்ளிகள் சிபிஎஸ்இ உடன் இணைக்கப்பட்டுள்ளன. இதில், 2 கோடி மாணவா்கள் மற்றும் 10 லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியா்கள் இடம்பெற்றுள்ளனா்.