Type Here to Get Search Results !

44-வது சென்னை புத்தகக் காட்சி நிறைவு: 8 லட்சம் வாசகர்கள் பார்வையிட்டனர்

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வந்த 44-வது சென்னை புத்தகக் காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. கடந்த 2 வாரங்களில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் இப்புத்தகக் காட்சியைப் பார்வையிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.




 தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் 44-வது சென்னை புத்தகக் காட்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ கல்லூரி மைதானத்தில் பிப்ரவரி 24-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. சுமார் 800 அரங்குகளுடன் கூடிய இந்த பிரம்மாண்ட புத்தகக் காட்சியை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
 தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கிய இப்புத்தகக் காட்சியைக் காண புத்தக ஆர்வலர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், மாணவ - மாணவிகள், இல்லத்தரசிகள் என பல்வேறு தரப்பினரும் வருகை தந்தனர். தினமும் மாலை வேளையில் இலக்கிய நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றன.
 கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வந்த புத்தகக் காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. நிறைவு நாள் நிகழ்ச்சியில், பதிப்புத் துறையில் 25 ஆண்டுகள் சேவை புரிந்தோருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் விருதுகள் வழங்கி கவுரவித்தார்.
 இந்நிகழ்வில் அவர் பேசியதாவது:
 தலைமுறை தாண்டி சமுதாயத்தின் வரலாற்றை, பண்பாட்டை பதிவுசெய்பவை புத்தகங்கள். படைப்பாளிகளின் வாழ்க்கை பயணம்தான் புத்தகமாக உருவெடுக்கிறது. காலத்தை கடந்து சமுதாயத்தை தரிசிக்க ஒரேவழி புத்தகங்கள்தான். கலை, இலக்கியம், சமுதாயப் போக்கு, வாழ்க்கை அனுபவங்கள் அத்தனையையும் புத்தகங்கள்தான் பதிவுசெய்கின்றன. மனிதன் தன்னைத் தானே அறிந்துகொள்ளும் பரிச்சயத்தை புத்தகங்கள் தரும். கலாச்சாரத்தை, மொழியின் தன்மையை எடுத்துக்காட்டும் கூறுகளாக திகழ்பவை புத்தகங்கள். மனிதர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் புத்தகங்களுக்கு உண்டு.
 புத்தகங்கள் வாசகர்களின் கரங்களில் தவழ்வதற்கு காரணமாக இருப்பவர்கள் பதிப்பாளர்கள். அவர்கள் சமூக வளர்ச்சியில் மிகப்பெரிய பங்களிப்பை செய்து வருகின்றனர். பதிப்புப் பணியை ஒரு தவம் என்று சொல்லலாம். பல்வேறு சிரமங்களுக்கு இடையேதான் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் பதிப்பாளர்களுக்கு சமுதாயம் நன்றிக்கடன்பட்டிருக்கிறது.
 இவ்வாறு நீதிபதி மகாதேவன் பேசினார்.
 `பபாசி’ தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் வரவேற்றுப் பேசும்போது, ``கடந்த 44 ஆண்டு காலமாக சென்னை மாநகரில் வாசிப்பை ஓர் இயக்கமாக நடத்தி வருகிறது `பபாசி’. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் `பபாசி’யின் புத்தகக் காட்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கரோனா சூழல் காரணமாக பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கியது. வாசகர்கள் தங்கள் அன்பினால் எங்களை திக்குமுக்காட வைத்துவிட்டனர். கடந்த ஆண்டு வருகைபுரிந்த வாசகர்களில் 50 சதவீதம் பேராவது இந்த ஆண்டு வருவார்களா என்று நினைத்தோம். ஆனால், 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஆண்டு புத்தகக் காட்சிக்கு வந்துள்ளனர்'' என்றார்.
 நிகழ்ச்சியின் நிறைவாக `பபாசி’ செயலர் எஸ்.கே.முருகன் நன்றி கூறினார். முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜேந்திர சோழனின் அரிய நாணயத்தை தமிழக அரசின் அருங்காட்சியகத் துறை ஆணையர் எம்.எஸ்.சண்முகம் வெளியிட்டார். சென்னை நாணயவியல் அமைப்பின் தலைவர் சென்னை மணிகண்டன் நாணயங்கள் குறித்து உரையாற்றினார்.

Top Post Ad

Below Post Ad