வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை, 3 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை என்ற புதிய நடைமுறையை விரைவில் மத்திய அரசு செயல்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என நடுவண அரசு அறிவித்தது. குறிப்பாக, நாள் ஒன்றுக்கான வேலை நேரம் எட்டிலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தப்படும் என்று கூறப்பட்டது. இந்த அறிவிப்பு தொழிற்சங்கங்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பிய நிலையில், தொழில் நிறுவனங்கள் கூடுதல் வேலை நேரத்தால் மகிழ்ச்சி அடைந்தனர்.
தொழிற்சங்கங்களிடையே இருந்து எதிர்மறையான விமர்சனங்கள் கிளம்பியதையடுத்து, இதனை மைய அரசு சற்று ஆறப்போட்டது. இந்த நிலையில், தற்போது மீண்டும் அதுதொடர்பான பேச்சு எழுந்துள்ளது.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர் அபூர்வ சந்திரா, ”தற்போது ஒரு நாளுக்கு 8 மணி நேர வீதம் 6 நாட்களுக்கு 48 மணி நேரமாக, தொழில் நிறுவனங்களில் வேலை நேரம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. ஒரு நாளைக்கு வேலை நேரம் என்பது 12 மணி நேரமாக கூட்டப்பட்டாலும், ஒரு வாரத்தில் 48 மணி நேரம் மட்டுமே தொழிலாளர்களிடம் வேலை வாங்க வேண்டும் என்ற விதியில் மாற்றமில்லை.
எனவே ஒருவேளை ஒரு நாளில் 12 மணி நேரம் வேலை வாங்கினால், 4 நாட்கள் மட்டுமே தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். மீதமிருக்கும் 3 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.
இதுப்பற்றி ஒவ்வொரு தொழிலாளியிடமும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கலந்துபேசி அவர்களின் ஒப்புதலுடன் மட்டுமே 12 மணி நேரம் வழங்க வேண்டும். ஏனெனில் அனைவராலும் 12 மணி நேரம் வேலை செய்ய இயலாது.
இதுதொடர்பான விதிகள் மற்றும் நெறிமுறைகளை வகுக்கும் இறுதிக்கட்டப் பணிகளை தொழிலாளர் நல அமைச்சகம் மேற்கொண்டுவருகிறது.
இதேபோல அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு அவர்களுக்கான வலைதளம் மே அல்லது ஜூனில் வெளியிடப்படும்.
அதில் தொழிலாளர்கள் அவர்களது தரவுகளைப் பதிய வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுடைய முழுமையான விவரங்களைத் தெரிந்துகொள்வதே மைய அரசின் நோக்கம். இதில் பதிந்துகொண்டால் விபத்துக்கள் ஏற்பட்டாலோ, குறைபாடுகள் இருந்தாலோ இலவசமாக காப்பீடு வழங்க வழிவகை செய்யப்படும்” என்றார். மேலும், தொழிலாளர்களின் நிலையை கருத்தில் கொண்டே எந்தவொரு முடிவையும் நடுவணரசு எடுக்கும் எனவும் தெரிவித்தார்.
Source Polimer News