அடுத்த 24 மணி நேரத்திற்குள் தென் தமிழகத்தில் உள்ள ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
குறிப்பாக தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
மேலும் மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்கள், புதுவை பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. அதனையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இந்தநிலையில் நாளை தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேணாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.