நாடு முழுவதும் நாளை கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 166 மையங்களில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதுவரை தமிழகத்துக்கு 5 லட்சத்து 56ஆயிரத்து 500 தடுப்பூசி மருந்துகள் கிடைக்கப்பெற்றுள்ளன. 160 மையங்களில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராஜெனகா இணைந்து உருவாக்கி, இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசியும், 6 மையங்களில் பாரத் பயோடெக் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசியும் செலுத்தப்பட உள்ளது.
இதனிடையே, சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி மையங்களுக்கான முன்னேற்பாடுகளை, மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு பார்வையிட்டார்.
கொரோனா தடுப்பூசி யாருக்கு போடலாம், யாருக்கு போடக்கூடாது என்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போட வேண்டும். ஒரு டோஸ் தடுப்பு மருந்து கொடுத்தால் அதன் பிறகு 14 நாட்கள் கழித்தே அடுத்த டோஸ் கொடுக்க வேண்டும்.
முதல் டோசில் எந்த வகை தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டதோ, அதே தடுப்பு மருந்துதான் இரண்டாவது டோசிலும் கொடுக்கப்பட வேண்டும். தடுப்பு மருந்துகளை மாற்றி கொடுத்துவிடக் கூடாது.
குறிப்பிட்ட மருந்துகள், உணவுப் பொருட்கள், தடுப்பு மருந்துகள் அல்லது ஊசி மருந்துகளால் ஒவ்வாமை ஏற்படக் கூடியவர்கள், கொரோனா தடுப்பு மருந்து முதல் டோசின்போது ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடக்கூடாது.கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடக்கூடாது, கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள், பிளாஸ்மா சிகிச்சை பெற்றவர்கள், நோயால் உடலநலம் குன்றி மருத்துவமனைகளில் இருப்பவர்களுக்கும் தடுப்பூசி போடக்கூடாது.
Source Dinathanthi