Type Here to Get Search Results !

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும்...வானிலை ஆய்வு மையம் தகவல்.!

வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


தமிழகத்தில் வட மேற்கு பருவமழை பெய்து வருவதன் தொடர்ச்சியாக தற்போது வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. அது தற்போது தெற்கு ஆந்திர கடல் பகுதியில் இருந்து தமிழகத்தின் மன்னார் வளைகுடா பகுதி வரை நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
குறிப்பாக அடுத்த 24 மணி நேரத்திற்கு விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, கடலூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். பிற கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும். உள்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். அடுத்த 3 நாட்களுக்கு, நீலகிரி, கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம், மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.
ஏனைய கடலோர மாவட்டங்கள் சென்னை மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். நாளை மற்றும் 8ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 9ம் தேதி தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஏனைய பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஒரு சில பகுதிகளில் கன மழையும் பெய்யக்கூடும். அதிக பட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் குறைந்த பட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். மேலும் தமிழக கடலோரப் பகுதியில் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி நீடித்து வருவதால் நான்கு நாட்களுக்கு மழை பெய்யும்.

Top Post Ad

Below Post Ad