நாளை கல்லூரிகள் திறக்கப்படுவதால் மீண்டும் மாணவர்கள் ரூட்தல என்ற பெயரில் ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு அராஜக செயல்களில் மாணவர்கள் ஈடுபடக் கூடாது என்று போலீஸ் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் கல்லூரி மாணவர்கள் யார் பெரியவன்? என போட்டி போட்டுக் கொண்டு மோதலில் ஈடுபடுவது வழக்கம்.
சென்னை மாநகர சாலைகளில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பலமுறை ரூட்தல பிரச்சினையால் மாணவர்கள் மோதிக் கொண்டுள்ளனர்.
பொது மக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் வகையில் பரபரப்பான சாலைகளில் நடைபெற்றுள்ள இந்த மோதல் சம்பவங்களின் போது மாணவர்களின் மண்டையும் உடைந்துள்ளது.பொதுமக்களும் பாதிப்புக் குள்ளாகி இருக்கிறார்கள்.
இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தபோதிலும் மாணவர்களின் மோதல் தொடர்கிறது.
இந்தநிலையில் கொரோனாவால் மூடப்பட்டு இருந்த கல்லூரிகள் நாளை திறக்கப்படுகிறது.
8 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்படுவதால் மீண்டும் மாணவர்கள் ரூட்தல போட்டியில் மோதலில் ஈடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக போலீசார் தேவையான முன் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
இதுதொடர்பாக வட சென்னை போலீஸ் இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் மாணவர்களை எச்சரித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகரில் கல்லூரிகள் நாளை திறக்க இருக்கிறது. 3-ம் வருட மாணவர்கள் கல்லூரிக்கு வர இருக்கிறார்கள். இந்த நேரத்தில் பேருந்து வழித் தடத்தில் ரூட்தல என்ற பெயரில் ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு பஸ்சின் கூரையில் பயணம் செய்வது, தொங்கிக்கொண்டு வருவது போன்ற அராஜக செயல்களில் மாணவர்கள் ஈடுபடக் கூடாது.
இதுபோன்று சேட்டை செய்யும் மாணவர்களுக்கும், மாணவர்கள் என்ற போர்வையில் வரும் சமூக விரோதிகளுக்கும் காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
இது போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள். அது சட்டத்துக்கு புறம்பானதாகும். பேருந்தில் பயணிக்கும் மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் செயல்களை மாணவர்கள் முழுமையாக தவிர்க்க வேண்டும்.
பெற்றோர்கள் மாணவர்களுக்கு இந்த விஷயத்தில் அறிவுரை கூற வேண்டும். ஆசிரியர்களும் இதனை வலியுறுத்த வேண்டும்.
இதை எல்லாம் மீறி செயல்படும் மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும். வழக்குப் பதிவு செய்யப்பட்டால் மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும். எனவே இதுபோன்ற செயல்களை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.