கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சென்னை உள்பட பல இடங்களில் வறண்ட வானிலையே நிலவி வருகிறது.அதே சமயத்தில் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. மாலை 6 மணிக்கு பின்னரே பனிப்பொழிவின் தாக்கத்தை உணரமுடிகிறது. சென்னையை பொறுத்தமட்டில் பகல் நேரங்களில் வெயில், மாலை நேரங்களில் பனிப்பொழிவு என வித்தியாசமான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.
இந்தநிலையில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 15-ந்தேதி (இன்று) தமிழகம் கடலோர பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 16-ந்தேதி (நாளை) முதல் 18-ந்தேதி வரை கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும், உள் மாவட்டங்களில் ஓரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.