Type Here to Get Search Results !

ஒரு எளிமையான கதை அதே சமயத்தில் ஆழமான சிந்தனை - பால.ரமேஷ்.



*தினம் ஒரு குட்டிக்கதை

தற்போது நல்ல நிலையிலிருக்கும் சில மூத்த மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து தாங்கள் படித்தப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரை சந்திக்க சென்றனர். சந்திப்பின் போது சுவாரஸ்யமாக சென்றுக்கொண்டிருந்த உரையாடல் திடீரென்று வேலை மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தம் பற்றிய விவாதமாக மாறியது.

வந்தவர்களுக்கு காபி கொடுக்க சமையலறைக்கு சென்ற பேராசிரியர் திரும்ப வரும்போது ஒரு பெரிய கூஜாவில் காப்பியையும் பலவிதமான கோப்பைகளையும் எடுத்து வந்தார். அவை பீங்கான், பிளாஸ்டிக், வெள்ளி, எவர்சில்வர், கண்ணாடி கோப்பையென சில விலை உயர்ந்தவைகளாகவும், வேலைப்பாடுகளுடனும் சில சாதாரணமாகவும் பலவிதங்களில் இருந்தன. பேரசிரியர் அவற்றை மேஜை மீது வைத்துவிட்டு, எல்லோரையும் சூடான காப்பியை தாங்களாகவே ஊற்றி குடிக்க சொன்னார்.

எல்லோரும் ஆளுக்கொரு கோப்பையில் காப்பியை ஊற்றி அருந்த தொடங்கும்போது பேராசிரியர் சொன்னார், நண்பர்களே கவனியுங்கள்
"நீங்க எல்லோரும் விலை உயர்ந்த, அழகான கோப்பைகளில் காப்பியை எடுத்திருக்கிறீர்கள். மேஜையில் மீதி இருப்பது மிக சாதாரணமான, விலை மதிப்பற்ற கோப்பைகள். உங்கள் அனைவருக்கும் மிகச் சிறந்த பொருட்கள்தான் தேவைப்படுகின்றன. அதைத்தான் எதிர்ப்பார்க்கிறீர்கள். அது தான் உங்கள் பிரச்சினனகளுக்கும் மன அழுத்தத்திற்கும் காரணம்."

"உண்மையில் நம் அனைவருக்கும் வேண்டியது காப்பி, கோப்பையல்ல. ஆனால் நீங்கள் எல்லோரும் நல்ல விலையுயர்ந்த கோப்பையை தான் எடுக்க முயற்சித்தீர்கள், மேலும் அடுத்தவர் எப்படிப்பட்ட கோப்பையை எடுத்திருக்கிறார் என்பதையும் நோட்டமிட்டீர்கள்."

"இப்பொழுது வாழ்க்கை என்பதை காப்பி என்று வைத்துக்கொண்டால் வேலை, பணம், சமூகத்தில் நமக்குள்ள பொறுப்பு, அந்தஸ்து ஆகியவை கோப்பைகள். இவையெல்லாம் வாழ்க்கையை வாழ்வதற்காக நம்மால் பயன்படுத்தப்படும் கருவிகள். இவற்றால் எல்லாம் வாழ்க்கையின் தரம் மாறாது."

"பொதுவாக நாம் கோப்பையின் மீதே கவனம் வைப்பதால் காப்பியின் சுவையை அனுபவிக்காமல் போய்விடுகிறோம்."

"ஆகவே நண்பர்களே கோப்பையில் உங்கள் கவனத்தை சிதறவிடாமல் காப்பியின் சுவையை அனுபவியுங்கள்."

Top Post Ad

Below Post Ad