ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. போன் என்றால் பேசுவதற்கு என்ற விதியெல்லாம் என்றோ மாறிவிட்டது. வங்கி பரிவர்த்தனைகள், சமூக வலைதளங்கள், கேமிங், இணையதள பயன்பாடுகள் என செல்போனின் பயன்பாடுகள் ஏராளம். பயனாளர்களை கவனத்தில் கொண்டு பட்ஜெட் போன்களை சந்தையில் இறக்கி அனைவரது கையிலும் போன்களை தவழவிடுகின்றன செல்போன் நிறுவனங்கள். மெள்ள மெள்ள நம் உடலுறுப்பாகவே மாறி வரும் ஸ்மார்ட்போனால் உடல்ரீதியான, மன ரீதியான பிரச்னைகளும் நம்மை ஆட்கொள்ளத்தொடங்கிவிட்டன. பல இளைஞர்கள் இரவில் சரியான நேரத்தில் தூங்காமல் செல்போனை பயன்படுத்திக்கொண்டு நள்ளிரவு வரை விழித்திருப்பது, காலையில் தாமதமாக எழுவது என அபாயகரமான வாழ்வை நோக்கி இழுத்துச் செல்கிறது செல்போன்.
குறிப்பாக கொரோனா காலத்து ஊரடங்கு செல்போன் பயன்பாட்டை அதிகரிக்க வைத்துவிட்டதாக தெரிவிக்கிறது ஒரு புள்ளிவிவரம். ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் நாம் சந்திக்க இருக்கும் பிரச்னை என்ன? சந்தித்துக்கொண்டிருக்கும் பிரச்னை என்ன? பார்ப்போம்.
செல்போன் நிறுவனமான விவோவும், சைபர் மீடியா ரிசர்ஜும் இணைந்து ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளன. அது குறித்து தெரிவித்த விவோவின் அதிகாரி ஒருவர், ‘அதிகப்படியான செல்போன் பயன்பாடு மனித உறவுகளுக்கு சிக்கலை உண்டாக்குகிறது. அதிகப்படியான செல்போன் பயன்பாடு அவர்களை அடிமையாக்குகிறது. அதுதான் சிக்கலே. குறிப்பாக கொரோனா ஊரடங்கு, வீட்டில் இருந்து வேலை போன்ற காரணங்கள் பயனாளர்களை, செல்போனுடன் அதிக இணக்கமாக மாற்றியுள்ளது. பலர் செல்போனுடனேயே நாட்களை கடத்தியுள்ளனர். செல்போன் பயன்பாட்டை கடந்த வருடத்துடன் ஒப்பிட்டால் 2020 என்பது மிகப்பெரிய வித்தியாசத்தை கொண்டுள்ளது. அதாவது, செல்போன் பயன்பாடு 2019-ஐ காட்டிலும் 39% அதிகரித்துள்ளது. கடந்த வருடம் சராசரியாக ஒருநாளைக்கு 4.5 மணி நேரம் என்பது இந்த வருடம் 7 மணி நேரமாக அதிகரித்துள்ளது.
செல்போன் பயன்பாட்டில் அலுவலக வேலை 75%, மற்றவர்களுடன் பேசுவதற்கு 63%, ஒடிடி பயன்பாடு 59%,வீடியோவுக்காக 56%, சோஷியல் மீடியா 55%, கேமிங் பயன்பாடு 45% என உள்ளது. கண்டிப்பாக ஊரடங்கு காரணமாக உண்டான வீட்டிலிருந்து வேலை என்ற நிலைதான் செல்போன் பயன்பாட்டை அதிகரிக்க உதவியுள்ளது.
இந்த தொடர் செல்போன் பயன்பாடு உறவுகளில் சிக்கலை ஏற்படுத்துகிறது என்பதே பயனாளர்களின் கவலையாக உள்ளது. 89% பயனாளர்கள் பிடித்தமானவர்களுடன் நேரத்தை செலவிட முடியவில்லை என்றும், அதற்கு செல்போனை அதிகபட்சமாக பயன்படுத்துவதான் காரணமாக இருப்பதாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளனர். 84% பேர் காலையில் கண் விழித்ததுமே செல்போனுக்குள் மூழ்குகின்றனர். 88% பயனாளர்கள் எந்தக் காரணமும் இல்லாமல் செல்போனை அடிக்கடி எடுத்து ஸ்வைப் செய்கின்றனர். அதிக செல்போன் பயன்பாட்டால் உடலளவிலும், மனதளவில் பிரச்னையை சந்திப்பதாக 70% பயனாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
செல்போன் கையில் இல்லை என்றால் 74% பேருக்கு மூட் அவுட் ஆகி விடுவதாக தெரிவித்துள்ளனர். செல்போன் இல்லை என்றால் தனிமையில் தவிப்பதாக 73% பேர் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் செல்போனை அடிக்கடி ஸ்விட்ச் ஆஃப் செய்துவைப்பதால் சந்தோஷ மனநிலையை உணர்வதாக 73% பேர் நம்புகிறார்கள். மேற்கண்ட புள்ளிவிவரங்கள் டெல்லி, மும்பை, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட 8 நகரங்களில் எடுக்கப்பட்டுள்ளது.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது செல்போனுக்கும் பொருந்தும். செல்போன் பயன்பாட்டை நம்முடைய பயன்பாட்டுக்கு வைத்துக்கொண்டு நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவேண்டுமே தவிர, அது நம்மை அடக்கிவிடக்கூடாது என்பது பலரின் அறிவுரையாக உள்ளது.