கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருவதால் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நகராட்சி பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், நேற்று மும்பை போலீஸார் மும்பை விமான நிலையத்திற்கு அருகில் உள்ள கிளப் ஒன்றில் சோதனை நடத்தினர்.
போலீஸார் சோதனையில் அங்கு கரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாதது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அந்த கிளப்பிலிருந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கைது செய்யப்பட்டார். அவரோடு பிரபல பாடகர் குரு ரந்தவா மற்றும் ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சுசேன் கான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து மும்பை போலீஸார், கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதற்காக சுரேஷ் ரெய்னாவோடு சேர்த்து 34 பேர் கைது செய்யப்படாததாகத் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சுரேஷ் ரெய்னா, பாடகர் குரு ரந்தவா ஆகியோர் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இச்சம்பவம் பற்றி சுரேஷ் ரெய்னா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒரு படப்பிடிப்புக்காக மும்பையில் இருந்தார் சுரேஷ் ரெய்னா. படப்பிடிப்பு இரவு வரை நீண்டது. இரவு உணவுக்காக நண்பரால் அழைக்கப்பட்டிருந்தார். இதன்பிறகு தில்லி செல்ல இருந்தார். உள்ளூர் நேரக் கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை ரெய்னா அறியவில்லை. அதை அவரிடம் எடுத்துச் சொன்ன பிறகு, உடனடியாக அதற்கான நடைமுறைகளைப் பின்பற்றினார். இச்சம்பவம் குறித்து ரெய்னா மிகவும் வருந்தினார். அரசின் விதிமுறைகளைப் பின்பற்றுவதில் அவர் எப்போதும் உறுதியாக இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.