Type Here to Get Search Results !

மெரினா கடற்கரை நாளை பொதுமக்களுக்கு திறப்பு: பாதுகாப்பு வழிமுறைகளை மீறுபவர்களுக்கு கடும் அபராதம்

 
மெரினா கடற்கரை 271 நாட்களுக்கு பிறகு நாளை பொதுமக்களுக்கு திறக்கப்படுகிறது. கடற்கரைக்கு வருபவர்கள் மாஸ்க் அணிதல், தனி மனித இடைவெளி உள்ளிட்ட விதிகளை மீறினால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் நாடும் முழுவதும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தவிர்த்து அனைத்து கடைகளும் மூடப்பட்டது. எனினும் கடந்த ஜூலை மாதம் முதல் கொரோனா ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு கடைகள் திறக்கப்பட்டு வந்தது. 
ஆனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கடற்கரை மற்றும் சுற்றுலா தலங்கள் திறக்கப்படவில்லை. குறிப்பாக சென்னையில் உள்ள மெரினா திறக்கப்படாமல் இருந்தது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மெரினா கடற்கரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு எப்போது திறக்கப்படும் என்று கேள்வி எழுப்பி இருந்தது. 

இந்நிலையில் ஊரடங்கு தொடர்பாக கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையில் வரும் 14ம் தேதி முதல் மெரினா கடற்கரை திறக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். 
இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி மெரினா கடற்கரை நாளை திறக்கப்படவுள்ளது. கடற்கரைக்கு வரும் மக்கள், மாஸ்க் அணியாமல் இருப்பது, தனிமனித இடைவெளி பின்பற்றாமல் நடப்பது போன்ற கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது: மெரினா கடற்கரை திறக்கப்படும் போது கடற்கரையில் அனைத்து வாயில்களிலும் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். எந்த வித தடையும் இருக்காது. ஆனால் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும். 
தமிழக அரசு விதிமுறைகளின்படி மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்படும். நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்களுக்கு அதற்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படும். வியாபாரிகள் வாழ்வதாரத்தை கருத்தில் கொண்டு அனைத்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்படும். அவர்களும் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் முறையாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் கூறினார்.
Source Tamil Murasu

Top Post Ad

Below Post Ad