Type Here to Get Search Results !

சுங்கச்சாவடியில் ‘பாஸ்டேக்’ காலக்கெடு பிப்ரவரி 15ம் தேதி வரை நீடிப்பு


இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் உள்ள 562 சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் முறை மூலம் சுங்கக் கட்டணம் செலுத்தும் முறை கட்டாயமாக்கப்பட்ட நிலையில், வரும் பிப்ரவரி 15 வரை காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் உள்ள 562 சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் கடந்து செல்லும்போது நேர விரயம் ஆவதைத் தடுப்பதற்காக ‘பாஸ்டேக்’ திட்டத்தை மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம் அமல்படுத்தியது. இதன்படி வாகனத்தின் முகப்பில் பார்கோடு அடங்கிய பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டவேண்டும். அதன்பிறகு சுங்கச்சாவடியை வாகனங்கள் கடக்கும்போது அங்குள்ள கருவிகள் தானாகவே கட்டணத்தை கழித்துக் கொள்ளும். பாஸ்டேக் ஸ்டிக்கரை ஆக்டிவேட் செய்து தர 22 முக்கிய வங்கிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

 
பாஸ்டேக் முறையில் சுங்கக் கட்டணம் செலுத்த வசதியாக வங்கிகள், சுங்கச்சாவடிகள், தனியார் சேவை மையங்களில் ஆதார் அட்டை மற்றும் வாகனங்களின் ஆர்.சி. நகலைக் கொடுத்து பாஸ்டேக் மின்னணு அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம். இந்த பாஸ்டேக் முறையால் 20 முதல் 25 மீட்டருக்குள் வாகனங்கள் வரும்போது ரேடியோ அதிர்வெண் உதவியுடன் தானியங்கி தடுப்புகள் விலகும் என்பதால், போக்குவரத்து நெரிசல் மட்டும் இன்றி, காலவிரயம் தவிர்க்கப்படுகிறது. ஓராண்டாக பாஸ்டேக் முறை அமலில் உள்ள நிலையில் 65 சதவீதம் பேர் மட்டுமே, பாஸ்ட்டேக் மின்னணு அட்டையை பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 முன்னதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘2017, டிசம்பர் 1ம் தேதிக்கு முன்பாக விற்பனை செய்யப்பட்ட எம் மற்றும் என் பிரிவு 4 சக்கர வாகனங்கள், இனிமேல் 2021, ஜனவரி 1ம் தேதி (இன்று) முதல் பாஸ்டேக் அட்டை கட்டாயமாக்கப்படுகிறது.
மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989இன்படி, 4 சக்கர வாகன உற்பத்தியாளர்கள், டீலர்களிடம் புதிதாக 4 சக்கர வாகனங்களைப் பதிவு செய்யும்போதே பாஸ்டேக் எண்ணை அளிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 4 சக்கர வாகனங்களுக்கான தகுதிச்சான்றிதழ் (பிட்னஸ் சர்டிபிகேட்) பெறும்போது, கண்டிப்பாக பாஸ்டேக் வைத்திருக்க வேண்டும். பாஸ்டேக் வைத்திருக்கும் வாகனங்களுக்கு மட்டுமே தகுதிச்சான்று தரப்படும். 2019, அக்டோபர் 1ம் தேதியிலிருந்து நேஷனல் பெர்மிட் வாகனங்கள் அனைத்துக்கும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. காப்பீட்டுச் சட்டத் திருத்தத்தின்படி, வாகனங்களுக்கு தேர்டு பார்ட்டி (மூன்றாம் நபர்) இன்சூரன்ஸ் பெறும்போதும் கண்டிப்பாக பாஸ்டேக் அட்டை வைத்திருக்க வேண்டும். காப்பீடு எடுக்கும்போது, பாஸ்டேக் அடையாள எண்ணை அளிப்பது கட்டாயமாகும். இந்த நடைமுறை மட்டும் 2021, ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். வாகனங்களுக்கு எளிதாக பாஸ்டேக் கிடைக்கும் வகையில் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று நள்ளிரவு முதல் பாஸ்டேக் திட்டம் அமல் படுத்துவதாக அறிவிக்க பட்டுள்ளது. ஆனால் இன்று காலை பாஸ்டேக் காலக்கெடுவைக் வரும் பிப்.15 வரை நீடித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Source Tamil Murasu
Tags

Top Post Ad

Below Post Ad