பாம்பனுக்கு 530 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள புரெவி புயல் 5 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து இன்றிரவு இலங்கையில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தெற்கு அந்தமான் அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு, வங்க கடலில் உருவான காற்றழுத்தம் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.
தற்போது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. நேற்றைய நிலவரப்படி, இலங்கையில் திரிகோணமலைக்கு கிழக்கு மற்றும் தென் கிழக்கே 400 கிமீ தொலைவிலும், கன்னியாகுமரிக்கு கிழக்கு மற்றும் தென் கிழக்கே 80 கிமீ தொலைவிலும் நிலை கொண்டிருந்தது. இதனால் தென் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்தது.
அடுத்த 12 மணி நேரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று தமிழக கடலோர பகுதிக்கு நெருங்கி வந்து, இன்று புயலாக மாற வாய்ப்புள்ளது. அந்த புயல் சின்னம் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து திரிகோண மலை அருகே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் இன்று அதிக மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தவிர, புதுக்கோட்டை, விருதுநகர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடு துறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிக கனமழை பெய்யும். காஞ்சிபுரம், திருவள்ளூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இன்றும் நாளையும் இலங்கையை ஒட்டிய கடலோர பகுதிகளில் மணிக்கு 80 முதல் 90 கிமீ வேகத்திலும், அதிகபட்சமாக 100 கிமீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள், கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வங்க கடலில் உருவான புரெவி புயல் பாம்பனுக்கு 530 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள நிலையில் 5 மணி நேரத்தில் மேலும் வலுவடையும்.
திரிகோணமலைக்கு 300 கி.மீ, கன்னியாகுமரிக்கு 700 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. பாம்பனில் 30 கி.மீ வேகத்தில் சூரைக்காற்று வீசுகிறது. தூறல் மழை பெய்து வருகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதையடுத்து பாம்பனில் 7ம் எண் எச்சரிக்கை கூண்டும், தூத்துக்குடியில் 6 எண் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது. புரெவி புயல் இன்று மாலை அல்லது இரவுக்குள் இலங்கையில் கரையை கடக்க வாய்ப்புள்ளது.
Source Tamil Murasu