கூகுள் பே செயலியானது அதிகப்படியான மக்களால் பயன்படுத்தக் கூடிய பணப்பரிமாற்றச் செயலியாகும். இந்தச் செயலி வழியாகப் பணப்பரிமாற்றம் செய்ய எந்தக் கூடுதல் கட்டணமும் கிடையாதென்பதாலும் இது கூகுள் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதென்பதாலும் பலரது விருப்பத்திற்கும், நம்பிக்கைக்கும் உரிய செயலியாக இருந்து வருகிறது.
இந்நிலையில், ஜனவரி மாதம் முதல் கூகுள் பே தளம் செயல்படாது என அதன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த சில தினங்களாகவே கூகுள் பே நிறுவனம் தன்னுடைய இலவச சேவையை நிறுத்தவுள்ளது என்றும் இனி பணப்பரிமாற்றத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இது குறித்து கூகுள் பே விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்ட இணையதளம் வாயிலான கூகுள் பே மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பயனாளர்கள் புதிய கூகுள் பே செயலியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கட்டண அறிவிப்பு என்பது அமெரிக்காவிற்கு மட்டுமே பொருந்தும். இந்தியாவில் இந்த வசதியைத் தொடர்ந்து இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்" எனக் கூறப்பட்டுள்ளது.