பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் ஆகியவற்றை காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வருகை தருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோவில் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் கூடுவதை தடுக்க அரசு தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் பழனி முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கும், நாளை காலை 8 மணிக்கு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்பதை தடுக்க மாவட்ட மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
அதேவேளையில் விழா நிகழ்ச்சிகளை பொதுமக்கள் காணும் வகையில் கோவிலின் வலைத்தளம், பேஸ்புக், யுடியூப் ஆகிய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். அதையடுத்து சமூக வலைத்தள பக்கத்தில் நிகழ்ச்சிகளை பதிவேற்றம் செய்யவும், டி.வி. சேனல்கள் வாயிலாக நேரலையில் மக்கள் காணவும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி www.palanimurugantemple.org என்ற கோவில் வலைத்தள பக்கத்திலும், https://www.facebook.com/Arulmigu&Dhandayuthapani&Swamy&Temple&Palani&111481050544508 என்ற பேஸ்புக் பக்கத்திலும், https://www.youtube.com/channel/UC6Kg5EbBPixNm3r2&LZkAxw என்ற யுடியூப் சேனலிலும் பக்தர்கள் பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.