ஒரு வீட்டில் மண் குடமும், இரும்புக் குடமும் இருந்தன.
மண்குடம் இரும்புக் குடத்துடன் நட்பு கொள்ள விரும்பியது.
இதைக் கண்ட பிற மண் பாண்டங்கள், “நமக்குச் சமமானவர்களுடன் நட்பு கொள்வதே சிறந்தது. நம்மை விட பலசாலியானவர்களிடம் நட்பு கொள்வது நமக்கு ஆபத்தாய் முடியும்” என்று எச்சரித்தன.
ஆனால் அதை மண்குடம் கேட்கவில்லை.இரும்புக் குடத்துடன் நட்பு வைத்துக் கொண்டது.
மண் குடத்துக்கு இரும்புக் குடத்துடன் சேர்ந்திருப்பதில் விருப்பம் அதிகமிருந்தது.
வீட்டுக்காரர் மண்குடத்தை எங்கு வைத்தாலும் அது யாருக்கும் தெரியாமல் இரும்புக் குடத்துடன் போய் இருந்து கொள்ளும்.
இதைக் கண்ட பிற மண் பாத்திரங்கள், “மண் குடமே, நீ இப்படி மண் இனத்துடன் சேராமல் இரும்பு இனத்துடன் சேர்ந்து கொள்வது உனக்கு ஆபத்தாய்த்தான் முடியப் போகிறது” என்றன.
ஆனால் அவைகளையெல்லாம் மண் குடம் கண்டு கொள்ளவேயில்லை.
ஒரு நாள் அந்த வீட்டுக்காரர் தன் பழைய வீட்டை விட்டு புதிய வீட்டுக்குச் செல்லத் தீர்மானித்தார்.
அவர் தன் வீட்டிலிருந்த அனைத்துப் பொருட்களையும் ஒரு வண்டியில் எடுத்து வைத்துக் கொண்டு புதிய வீட்டிற்கு வண்டியை ஓட்டிச் சென்றார்....
அந்த வண்டியில் மண் குடம் பிற மண் பாத்திரங்களுடன் சேர்த்து வைக்கப்பட்டு இருந்தது. மண் குடத்திற்கு தன் நண்பனான இரும்புக் குடத்தை விட்டு பிரிய மனமில்லை... அங்கிருந்து நகர்ந்து இரும்புக் குடத்துடன் சேர்ந்து அமர்ந்து கொண்டது.
வண்டி ஒரு பள்ளத்தில் ஏறி இறங்கியது. வண்டி குலுங்கியது.
இரும்புக் குடம் மண் குடத்தின் மேல் கவிழ்ந்தது.
அவ்வளவுதான்! மண் குடம் தூள் தூளாகியது.
தங்கள் இனத்தைச் சேர்ந்த மண் குடம் தகாத நட்பால் மாண்டு போனதை எண்ணி வருத்தப்பட்டன....