தற்போது சுமார் 90 கி.மீ. தொலைவிலுள்ள புயல், மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கிறது. வேகம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ள நிலையில், 5 அல்லது 6 மணி நேரத்தில் நள்ளிரவு 12 மணிக்கு முன்னரே கரையைக் கடக்கத் தொடங்கலாம்.
புயல் இன்றிரவு கரையைக் கடக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இப்புயலின் கண் பகுதி மட்டும் சுமார் 110 கி.மீ பரப்பும், சுமார் 380 கி.மீ. விட்டம் கொண்டதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
மணிக்கு 5 கி.மீ வேகத்தில் கரையை நோக்கி பயணித்த அதன் வேகம் படிப்படியாக உயர்ந்து மணிக்கு 15 கி.மீ என்ற நிலையை அடைந்தது. எனவே இப்புயலின் வெளிவட்டம் முதன்முதலாக கடலூரை மாலை 4 மணியளவில் தொட்டதாக கடலூர் வானிலை அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இப்புயல் புதுச்சேரிக்கு சற்று வடக்கே கரையைக் கடக்கும் என்றும் கரையை முழுமையாக கடந்து முடிக்க நள்ளிரவைத் தாண்டிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கடலூரில் அதிகபட்சமாக காற்றின் வேகம் மணிக்கு 80 கி.மீட்டராக இருக்கும், கடும் காற்றுடன் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படியே கடலூரில் காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து வருவதோடு மழையின் வேகமும் அதிகரித்துள்ளது.
Source
'தினமணி'