கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் திருப்பதியில் கடந்த ஜூன் மாதம் முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். முதலில் 3 ஆயிரம் பக்தர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட தரிசனம் பின்னர் படிப்படியாக உயர்ந்து 27 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்கப்பட்டு வந்தனர். இலவச தரிசனத்தில் 6 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் வருகை தந்ததால் டிக்கெட் கிடைக்காமல் பக்தர்கள் திரும்பி செல்லும் அவல நிலை ஏற்பட்டது. மேலும் பக்தர்கள் டிக்கெட் வாங்க முண்டியடித்ததால் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதனால் மேலும் கூடுதலாக இலவச தரிசன டோக்கன் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி இன்று முதல் கூடுதலாக 4 ஆயிரம் இலவச டோக்கன் விநியோகிக்கப்படுகிறது. இதன் மூலம் இலவச தரிசனத்தில் 10 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். திருப்பதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்த போது தேவஸ்தானத்துக்கு சொந்தமான விடுதிகளில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டன. இதனால் அலிபிரியில் உள்ள ஸ்ரீதேவி காம்ப்ளக்ஸ்சில் மட்டுமே இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன. தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதால் தேவஸ்தான விடுதிகளில் செயல்பட்டு வந்த கிகிச்சை மையங்கள் மூடப்பட்டு தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டன. அந்த விடுதிகளை ஊழியர்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து வருகின்றனர். தற்போது திருப்பதிக்கு ரெயில், பஸ் போக்குவரத்து அதிகரித்துள்ளதால் முன்பதிவுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக விஷ்ணு நிவாசம் விடுதியில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவதை தேவஸ்தானம் நேற்று மீண்டும் தொடங்கியது.