சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் இன்று காலை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 3 நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வரும் 25 ஆம் தேதி தமிழக கடற்கரையை நோக்கி வரக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும், அதனை தொடர்ந்து வரும் 23, 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வரும் 21, 22 ஆகிய தேதிகளில் தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால மீனவர்கள் அந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.