தமிழக கடலோர பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியதாவது: நாளை (12ம் தேதி) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுவை, காரைக்கால், மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். சில இடங்களில் மிக கனமழை பெய்யும். பிற கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும். தமிழக கடலோர பகுதிகளில், இன்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசலாம். எனவே, மீனவர்கள்அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை சென்னை உட்பட பல மாவட்டங்களில் மிகமிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கன மழை பெய்தால், வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள, வருவாய் துறை மற்றும் பொதுப்பணி துறையினருக்கும், வானிலை மையம் தகவல் அனுப்பி உள்ளது. அதன்பேரில், மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.