நாளை முதல் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, நாகை மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது 25-ந்தேதி நிவர் புயலமாக மாறி கரையை கடக்க இருக்கிறது. இந்த புயல் அதிதீவிர புயலாக மாறவும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
ஒருவேளை அதிதீவிர புயலாக மாறினால் 100 கி.மீட்டருக்கு அதிகமான வேகத்தில் காற்று வீசக்கூடும். இந்த காற்றழுத்தத்தாழ்வு மற்றும் புயல் காரணமாக நாளையில் இருந்து வியாழக்கிழமை வரை மூன்று நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நிவர் புயல் முன்னெச்சரிக்கை குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். அதன்பின் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, நாகை ஆகிய ஏழு மாவட்டங்களில் நாளை மதியம் 1 மணி முதல் பொது போக்குவரத்து நிறுத்தப்படும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும், மறு அறிவிப்பு வரும்வரை இந்த போக்குவரத்து இயங்காது எனத் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் கூடுமான அளவிற்கு வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். ரேசன் கார்டு போன்ற முக்கியமான ஆவணங்களை தண்ணீர் படாத இடங்களில் பாதுகாப்பாகவும் கேட்டுக்கொண்டுள்ளார்.