வருகின்ற 14-ம் தேதி நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்கிடையே டெல்லியில் உள்ள தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தில், ‘இந்தியன் சோஷியல் ரெஸ்பான்ஸ்பிலிடி நெட்வொர்க்’ என்ற அமைப்பு தாக்கல் செய்த மனுவில், ‘கொரோனா காலத்தில், காற்றின் தரம் மோசமாக இருப்பதால், தடுப்பு நடவடிக்கையாக தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தது.இந்த மனுவை தேசிய பசுமை தீர்ப்பாயத்தலைவர் ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, ‘டெல்லி, அதை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள், சுற்றுச்சூழல் நலனை கருத்தில் கொண்டு, வருகிற 7-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கலாமா? என்பது குறித்து டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களின் தலைமைச்செயலாளர்கள், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம், டெல்லி போலீஸ் கமிஷனர் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையை வருகிற 5-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.
Source Dinathanthi